சதம் அடித்தவருக்கு விருந்து வேண்டாம்… தோல்வியடைந்தவர்களுக்கு நம்பிக்கை தான் தேவை!

கபில்தேவ்

இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததைத் தொடர்ந்து, பயிற்சியாளர் கம்பீர் மீதான விமர்சனங்கள் உச்சம் அடைந்துள்ளன. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டனும், 1983 உலகக் கோப்பை வீரருமான கபில்தேவ், கம்பீருக்கு ஒரு முக்கியமான அறிவுரை வழங்கியுள்ளார்.

கபில்தேவ் தனது கருத்தில், “இன்றைய கிரிக்கெட் உலகில் ‘பயிற்சியாளர்’ என்ற பதவியே தேவையில்லை என நினைக்கிறேன். கம்பீர் பயிற்சியாளராக இருக்க முடியாது. ஆனால், மேலாளராக இருக்கலாம்,” என்று தெளிவுபடுத்தினார்.

அவர் மேலும் விளக்கியதாவது: “உண்மையான பயிற்சியாளர்கள் என்பவர்கள் பள்ளி, கல்லூரிகளில் கிரிக்கெட்டைக் கற்றுக் கொடுப்பவர்கள் தான். தற்போதைய தலைமுறையில், ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கோ அல்லது விக்கெட் கீப்பருக்கோ கம்பீர் எப்படி பயிற்சி கொடுக்க முடியும்?”

இதனால், கம்பீரின் உண்மையான பணி, வீரர்களை நிர்வகிப்பதும், அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதும் தான் என்று கபில்தேவ் வலியுறுத்தினார்.

“பயிற்சியாளர் அல்லது கேப்டனின் பணி அணிக்கு நம்பிக்கை தருவது மட்டுமே. ஒரு வீரர் சதம் அடித்துவிட்டால், அவருக்கு விருந்து வைக்க வேண்டியதில்லை,” என்று அவர் கூறினார்.

மாறாக, “யார் சரியாக விளையாடவில்லையோ, அவர்களுடன் விருந்துக்குச் செல்ல வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, ‘இன்னும் உன்னால் சிறப்பாக செயல்பட முடியும்’ என்று சொல்ல வேண்டும்,” என்று கபில்தேவ் விளக்கினார்.

மேலும், “ஒரு கேப்டன் அல்லது மேலாளர் தனது செயல்பாடுகளை மட்டுமல்ல, முழு அணியையும் ஒருங்கிணைத்து செயல்பட வைக்க வேண்டும். அதுதான் உண்மையான தலைமை,” என்று அவர் முடித்தார்.

கபில்தேவின் இந்த அறிவுரை, தற்போதைய இந்திய அணி மேலாண்மை அமைப்பு மீதான விவாதங்களுக்கு மேலும் தீ ஊட்டியுள்ளது. குறிப்பாக, “பயிற்சியாளர்” என்ற பதவியின் உண்மையான பங்கு என்ன என்பதை மீண்டும் பொது விவாதமாக்கியுள்ளது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net