லண்டனில் தமிழர் கடையில் தீ வைக்க முயற்சி: சந்தேகநபரை மடக்கிப் பிடித்த கடை ஊழியர்கள்

லண்டனில் தமிழர் கடையில் தீவைக்க முயற்சி: சந்தேகநபரை மடக்கிப் பிடித்த கடை ஊழியர்கள்; வீடியோ வெளியாகி பரபரப்பு

லண்டனில் தமிழர் ஒருவரின் கடைக்குள் புகுந்து தீவைத்து எரிக்க முயன்ற நபரை கடையில் இருந்தவர்கள் தடுத்து தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், கடையின் பணம் வழங்கும் பகுதியில் இளைஞன் ஒருவர் நின்றிருந்த போது, திடீரென உள்ளே நுழைந்த நபர், பெற்றோலை ஊற்றி தீப்பற்ற வைக்க முயல்வது தெளிவாக பதிவாகியுள்ளது.

இதனை கவனித்த கடையில் இருந்த இளைஞன் முதலில் சந்தேகநபரிடமிருந்து தப்பி, பின்னர் அவரை எதிர்த்து தாக்குகிறார். இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்ட நிலையில், மற்றொரு நபர் தலையிட்டு தமிழ் இளைஞனுடன் இணைந்து சந்தேகநபரை மடக்கிப் பிடித்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம், லண்டனில் உள்ள தமிழர் சமூகத்தில் அச்சத்தையும் கவலையையும் அதிகரித்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தை பின்புலமாகக் கொண்ட, திருமணமாகி ஒருவருடமே ஆன இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

கடந்த 14ஆம் திகதி நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், தமிழரின் கடைக்குள் நுழைந்த நபர் கொள்ளையிட முயன்றதுடன், கடைக்கு தீவைக்கவும் முயற்சித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தடுக்க முயன்ற கடையில் இருந்த நபர், சந்தேக நபரை கடுமையாக தாக்கி கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது.

நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து பல சிரமங்களை கடந்து வாழ்க்கையில் முன்னேற முயலும் நிலையில், இவ்வாறான கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்வது பெரும் கலக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக தமிழர்களை இலக்காகக் கொண்டு இடம்பெறும் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள், அங்குள்ள சமூகத்தினரிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் அதிர்ச்சியையும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net