2026 ஐபிஎல் மார்ச் 26-ம் தேதி தொடக்கம்; சின்னசாமி மைதானத்தில் முதல் போட்டி சந்தேகத்தில்

2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் மார்ச் 26-ம் தேதி தொடங்கி, மே 31-ம் தேதி வரை நடைபெறும் என பிசிசிஐ அணிகளின் உரிமையாளர்களிடம் ரகசியமாக அறிவித்துள்ளது. ஆனால், முதல் போட்டி எங்கு நடைபெறும் என்பது இன்னும் தெளிவாக இல்லை.

ஐபிஎல் வழக்கப்படி, முந்தைய சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற அணியின் சொந்த மைதானத்தில் அடுத்த சீசனின் முதல் போட்டி நடக்கும். 2025-ஆம் ஆண்டு ஆர்சிபி (RCB) அணி கோப்பையை வென்றதால், விதிகளின்படி 2026 ஐபிஎல் தொடக்கப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கவேண்டும்.

ஆனால், கடந்த ஆண்டு ஆர்சிபி வெற்றியை கொண்டாடிய நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோக சம்பவம் காரணமாக, பாதுகாப்பு காரணங்களுக்காக சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடக்கும் குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

ஐபிஎல் சிஇஓ ஹேமங் அமீன் கூறியதாவது, “சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) அரசிடம் இருந்து நிபந்தனையுடன் கூடிய அனுமதியைப் பெற்றுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விதிமுறைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே அங்கு போட்டி நடத்த அனுமதி வழங்கப்படும்,” என தெரிவித்தார். இதனால் ஆர்சிபி அணி, தற்போதைய சாம்பியனாக இருந்தாலும், முதல் போட்டியை சொந்த மைதானத்தில் ஆடுமா என்பது சந்தேகமாக உள்ளது.

இன்று நடைபெறும் ஏலத்தில் முதலில் 350 வீரர்கள் பங்கேற்பது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் 19 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். இதனால் மொத்த வீரர்களின் எண்ணிக்கை 369 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்டவர்களில் மலேசிய வீரர் விரன்தீப் சிங், தென்னாப்பிரிக்காவின் கைல் வெரைன், ஈதன் போஷ் மற்றும் ஜார்க்கண்ட் வீரர் விராட் சிங் ஆகியோர் அடங்கியுள்ளனர். மதியம் 2:30 மணிக்கு தொடங்கும் இந்த ஏல் பரபரப்பான சூழலில் நடைபெறுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net