19வது Indian Premier League தொடருக்கான மினி ஏலம் இன்று, டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 10 அணிகளும் முழு தயாரிப்புடன் களமிறங்கியுள்ள நிலையில், மொத்தம் 369 வீரர்கள் ஏலத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்ப்பது, ஏலத்தில் அமர்ந்து முழு நிகழ்வையும் கட்டுப்படுத்தும் ஏலதாரர்தான். அந்த முக்கிய பொறுப்பை இந்த முறை ஏற்றிருப்பவர் மல்லிகா சாகர்.
மல்லிகா சாகர் சிறு வயதிலேயே ஒரு பெண் ஏலதாரரை மையக் கதாபாத்திரமாக கொண்ட புத்தகத்தை படித்ததிலிருந்து, அந்த தொழிலின் மீது அவருக்கு ஈர்ப்பும் கனவும் உருவானது. கல்லூரி காலத்தில் ஆர்ட் ஹிஸ்ட்ரியில் பட்டம் பெற்றிருந்தாலும், ஏலதாரராக வேண்டும் என்ற இலக்கை அவர் ஒருபோதும் கைவிடவில்லை. அதன் பயனாக, தனது 26வது வயதிலேயே நியூயார்க்கில் உள்ள உலகப் புகழ்பெற்ற Christie’s ஏல நிறுவனத்தில் முதல் இந்தியப் பெண் ஏலதாரராக அவர் உருவெடுத்தார்.
2001ஆம் ஆண்டு ஏலதாரராக தனது பயணத்தை தொடங்கிய மல்லிகா சாகர், சர்வதேச அளவில் கலைப் பொருட்கள், பழமையான அரிய பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏலம் விடும் பெரும் அனுபவத்தை பெற்றுள்ளார். அந்த அனுபவமே, இன்று ஐபிஎல் போன்ற மிகப்பெரிய விளையாட்டு ஏலங்களை சீராகவும் தன்னம்பிக்கையுடனும் நடத்த உதவுகிறது. 2021ஆம் ஆண்டு ப்ரோ கபடி லீக் ஏலத்தை முதன்முறையாக நடத்திய அவர், அதன் பின்னர் மகளிர் பிரிமியர் லீக் ஏலங்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறார். 2024 ஐபிஎல் மினி ஏலம், 2025 ஐபிஎல் மெகா ஏலம் ஆகியவற்றையும் வெற்றிகரமாக நடத்திய மல்லிகா, தற்போது 2026 ஐபிஎல் மினி ஏலத்தையும் நடத்துகிறார்.
மல்லிகா சாகரின் தைரியத்தையும் தெளிவையும் வெளிப்படுத்திய ஒரு சம்பவம் 2024 மினி ஏலத்தில் நடந்தது. அப்போது Punjab Kings அணி, ஷஷாங் சிங் என்ற பெயர் கொண்ட வேறு ஒரு வீரரை வாங்க நினைத்த நிலையில், அதே பெயரில் இருந்த மாற்று வீரரை தவறுதலாக ஏலத்தில் எடுத்துவிட்டது. பின்னர் அந்த தவறை திருத்த கோரி மல்லிகா சாகரிடம் முறையிட்டபோது, “ஒருமுறை விற்கப்பட்ட வீரர், விற்கப்பட்டவரே. அதை மாற்ற முடியாது” என்று அவர் உறுதியாக மறுத்தார். அவரது இந்த முடிவு அப்போது மட்டுமல்ல, இன்றளவும் பேசப்படும் சம்பவமாகவே உள்ளது.
ஆண் ஆதிக்கம் நிறைந்த ஒரு துறையில், தன்னம்பிக்கை, தெளிவு மற்றும் தைரியத்துடன் முன்னேறி, உலகமே உற்று நோக்கும் ஐபிஎல் ஏல மேடையில் தில்லாக நின்ற முதல் பெண் ஏலதாரராக மல்லிகா சாகர் இன்று பலருக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்.

