இந்திய கிரிக்கெட் அணி மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இடையிலான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தர்மசாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் மூலம் இந்தியா தொடரில் 2–1 என முன்னிலை பெற்றது. ஆனால், போட்டியின் நடுவே நடந்த ஒரு சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியது.
ஆட்டத்தின் 13-வது ஓவரில் சிவம் துபே பந்துவீசியபோது, தென்னாப்பிரிக்க வீரர் டோனோவன் ஃபெரீரா அடித்த பந்து லாங்-ஆன் திசையில் சென்றது. அர்ஷ்தீப் சிங் ஓடி வந்து எளிதான கேட்சைப் பிடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரது கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது. இதைப் பார்த்த இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடும் கோபம் வெளிப்படுத்தினார். கேமராக்கள் டிரஸ்ஸிங் ரூமை காட்டியபோது, கம்பீர் அதிருப்தியுடன் கத்திய காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
முந்தைய போட்டியில் அர்ஷ்தீப் 7 வைடுகள் வீசியதால் ஏற்கனவே கம்பீர் விரக்தியடைந்திருந்த நிலையில், இம்முறை கேட்ச் தவறிய சம்பவம் அவரது கோபத்தை மேலும் தூண்டியதாக கூறப்படுகிறது. இருப்பினும், கேட்ச் தவறினாலும் பந்துவீச்சில் அர்ஷ்தீப் அசத்தினார். 4 ஓவர்கள் வீசி வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹென்ரிக்ஸ் மற்றும் கேப்டன் மார்க்ரம் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், 3.20 என்ற சிறப்பான எகானமி ரேட்டுடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் மார்க்ரம் 61 ரன்கள் எடுத்துத் தனி ஆளாகப் போராடினார். எளிய இலக்கை துரத்த களமிறங்கிய இந்தியாவுக்கு அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் நல்ல தொடக்கம் கொடுத்தனர். பின்னர் திலக் வர்மா மற்றும் சிவம் துபே பொறுப்புடன் விளையாடி 15.5 ஓவர்களிலேயே அணிக்கு வெற்றியை உறுதி செய்தனர்.
இந்த வெற்றியின் மூலம் தொடரில் 2–1 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, அடுத்த போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதே நேரத்தில், அர்ஷ்தீப்பின் தவறும் அதற்கு கம்பீர் காட்டிய எதிர்வினையும் இந்தப் போட்டியின் மறக்க முடியாத தருணமாக அமைந்தது.



