ஹர்திக் பாண்டியா- கவுதம் கம்பீர் விவாத வீடியோ வெளியாகி பரபரப்பு! பின்னணி என்ன?

ஹர்திக் பாண்டியா- கவுதம் கம்பீர் விவாத வீடியோ வெளியாகி பரபரப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு பிறகு, டிரஸ்ஸிங் ரூமில் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவும் காரசாரமாக விவாதித்ததாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூ சண்டிகரில் நடந்த இந்த போட்டியில், இந்தியா 215 ரன்கள் என்ற இலக்கை பின்தொடர முயற்சித்தாலும் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையை அடைந்துள்ளது.

வீடியோவில் கம்பீர் ஆவேசமாக பாண்டியாவிடம் கேள்விகள் எழுப்புவது மற்றும் பாண்டியா தனது விளக்கத்தை கூறுவது பதிவாகியுள்ளது. ஆடியோ இல்லாதபோதிலும், அவர்களின் உடல் மொழியிலிருந்து நிலைமை சற்று கடுமையாக இருந்தது என ரசிகர்கள் கருதி வருகின்றனர்.

விவாதத்திற்கு காரணமாக ஹர்திக் பாண்டியாவின் மந்தமான ஆட்டம் பார்க்கப்படுகிறது. தொடர் முதல் போட்டியில் 28 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த பாண்டியா, இரண்டாவது போட்டியில் 215 ரன்கள் சேர்க்க வேண்டிய சூழலில் 23 பந்துகளில் வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிரடியாக ரன் வேகம் அதிகரிக்கப்படாததால் கம்பீர் கேள்வி எழுப்பியிருக்க வாய்ப்பு உள்ளது.

இதற்கு பாண்டியாவை மட்டும் குறை சொல்ல முடியாது; கம்பீரின் சில முடிவுகளும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன.

மேலும், முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் டி20 ஃபார்மில் இல்லாத சுப்மன் கில்லை ஏன் தொடர்ந்து ஆதரிக்கிறீர்கள், முக்கியமான 3-வது இடத்தில் அக்சர் படேலை ஏன் களமிறக்க வேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உலகக்கோப்பை நெருங்கும் நிலையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் தடுமாறுவது மற்றும் டிரஸ்ஸிங் ரூமில் ஏற்பட்ட சலசலப்புகள் ரசிகர்களுக்கு கவலை ஏற்படுத்தியுள்ளன. அடுத்த போட்டி தர்மசாலாவில் நடைபெற உள்ளது. அங்கு இந்தியா தவறுகளை திருத்தி மீண்டு வருமா என்பது எதிர்பார்க்கப்படுகிறது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net