டொராண்டோவில் 34 பேர் அதிரடியாக கைது: மொத்தம் 139 குற்றச்சாட்டுகள் பதிவு!

டொராண்டோவில் 34 பேர் அதிரடியாக கைது

டொராண்டோ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வந்த பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 34 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிரேட்டர் டொராண்டோ பகுதியெங்கும் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருட்களை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு கும்பலை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

Project Hydrogen என அழைக்கப்படும் இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, மொத்தம் 139 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சார்ஜெண்ட் பிராட் கார்னர் தெரிவித்தார். “44” என்ற பெயரில் அறியப்படும் இந்த கும்பல், டர்ஹாம் பிராந்தியத்திலும் டொராண்டோ பெருநகரப் பகுதியின் பிற பகுதிகளிலும் வசித்து வந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த கும்பலின் குற்றச் செயல்கள் டர்ஹாம் எல்லைகளைத் தாண்டி வட ஒன்டாரியோ மற்றும் வின்னிப்பெக் வரை பரவியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படையாக காட்டி, குற்றங்களின் மூலம் செல்வம் ஈட்டும் கலாசாரத்தை அவர்கள் வெளிப்படுத்தி வந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.

இந்த விசாரணை 2025 ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டு, அதன் பின்னர் பல மாதங்களாக ஒன்டாரியோ மற்றும் வின்னிப்பெக் பகுதிகளில் 61 தேடுதல் உத்தரவுகள் அமுல்படுத்தப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது 10 சட்டவிரோத துப்பாக்கிகள், 2.7 மில்லியன் டொலர் மதிப்புள்ள போதைப்பொருட்கள் மற்றும் 200,000 கனடிய டொலர் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net