பிரித்தானியாவிலிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் இந்திய மாணவர்கள்: அதிர்ச்சி தகவல்

2025ஆம் ஆண்டில், பிரித்தானியாவிலிருந்து மொத்தம் 74,000 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர். இவர்களில் சுமார் 45,000 பேர் மாணவர்கள் ஆவர். இந்தப் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களின் வெளியேற்றம், பிரித்தானிய உயர் கல்வி அமைப்பின் நிலைத்தன்மையை கடுமையாக பாதிக்கும் என கல்வித்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரித்தானிய பல்கலைக்கழகங்கள், சர்வதேச மாணவர்களிடமிருந்து வசூலிக்கும் உயர்ந்த கல்விக் கட்டணத்தை நம்பி இயங்குகின்றன. இந்த வருவாய் இல்லாமல், உள்நாட்டு மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வியை வழங்குவது கடினமாகிவிடும். எனவே, இந்திய மாணவர்களின் பெரும் அளவிலான வெளியேற்றம், பல்கலைக்கழகங்களின் நிதிநிலையை பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

2024 முதல், பிரித்தானிய அரசு சர்வதேச மாணவர்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பெரும்பாலான மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்து வர முடியாத நிலை, திறன்மிக்க பணியாளர்களின் விசாவிற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு உயர்த்தப்பட்டது மற்றும் குடும்ப விசாவுக்கான தகுதிகள் கடுமையாக்கப்பட்டது ஆகியவை அடங்கும்.

இந்திய மாணவர்களின் முதன்மை நோக்கம், படிப்பை முடித்த பின்னர் பிரித்தானியாவில் குடியமர்ந்து குடும்பத்துடன் வாழ்வது ஆகும். ஆனால், தற்போதைய கொள்கைகள் இந்த எதிர்பார்ப்புகளுக்கு முரணாக அமைவதால், பலரும் பிரித்தானியாவில் படிப்பதை தவிர்த்து, கனடா, ஆஸ்திரேலியா அல்லது ஜெர்மனி போன்ற மாற்று நாடுகளை நோக்கி திரும்பியுள்ளனர்.

இந்த நிலை தொடர்ந்தால், பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக, பல பாடப்பிரிவுகள் நிறுத்தப்படவோ அல்லது கல்லூரி ஊழியர்கள் வேலையிழப்பு ஏற்படவோ சாத்தியம் உள்ளது. மேலும், “உலகத்தரம் வாய்ந்த கல்வி” என்ற பிரித்தானியாவின் சர்வதேச பெயரும் சேதமடையக்கூடும் என கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net