50 சதமடிச்சும் ஏன் இப்படி வெறித்தனமா கொண்டாடுறார் விராட்? – அஸ்வின் விளக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு முக்கிய நட்சத்திரங்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா, டெஸ்ட் மற்றும் T20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இருவரும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே களத்தில் இறங்கி, 2027 உலகக் கோப்பையுடன் முழுமையாக ஓய்வு பெற திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், அதற்குள் புதிய தலைமுறை வீரர்களை முன்னிலைப்படுத்தும் நோக்கில், தேர்வுக்குழுவும் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் இவர்களை அணியிலிருந்து “கழற்றும்” முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில், 2025 சாம்பியன்ஸ் ட்ராபி வென்ற ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி, சுப்மன் கில்லைப் புதிய தலைவராக நியமித்து புதிய அணியமைப்பைத் தொடங்கியுள்ளது தேர்வுக்குழு. இதனால், விராட்–ரோஹித் இருவரும் தங்கள் திறமையை அடுத்தடுத்து நிரூபிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், கடந்த ஆஸ்திரேலியா தொடரில் ரோஹித் சர்மா “தொடர்நாயகன்” விருதை வென்று சந்தேகித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில், விராட் கோலி அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் சதமடித்து, தனது இருப்பை உணர்த்தி வருகிறார். முக்கியமாக, ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை அடித்த உலகின் ஒரே வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில், சதமடித்த போதெல்லாம் அதை அமைதியாகவும், சாதாரணமாகவும் கொண்டாடியவர், இப்போது தென்னாப்பிரிக்க தொடரில் சதமடிக்கும்போது இளமைக் காலத்தில் காட்டியதைப் போலவே காற்றில் துள்ளி, கைகளை உயர்த்தி, வெறித்தனமாக கொண்டாடி வருகிறார். இந்த மாற்றம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் ஸ்பின் வீரரும், இப்போது கருத்தாளராக செயல்படுபவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஒரு முக்கியமான விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில்: “விராட் கோலி ஏன் இப்படி வெறித்தனமாக கொண்டாடுகிறார்? அவர் உண்மையில் என்ன சிந்திக்கிறார்? இதைப் புரிந்துகொள்ள, அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு விலகியிருப்பதை நாம் மறக்கக்கூடாது. டெஸ்ட் கிரிக்கெட்டை அவர் மிகவும் விரும்பினார். ஆனால் தனது தேவைகளுக்கு ஏற்ப, தனக்கான முடிவை எடுத்து அதிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து, விஜய் ஹஜாரே கோப்பையில் கூட விளையாட உடன்பட்டிருக்கிறார்.”

“இப்போது யாராவது என்னையும் என் திறமையையும் சந்தேகிக்கிறார்களா? என்று விராட் சிந்தித்துக்கொண்டிருப்பார். அந்த சந்தேகங்களை மனதில் எடுத்துக்கொண்டு, தன்னை சந்தேகிப்பவர்களுக்கு தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என உறுதி கொண்டிருக்கிறார். சில சமயங்களில், வலுக்கட்டாயமாக உங்களை நிரூபிக்க முயன்றால், அது எதிர்மறையாக செல்லக்கூடும். கடந்த காலத்தில் விராட்டுக்கும் அது நடந்தது. ஆனால் இப்போது, ‘என்னையா சந்தேகிக்கிறீர்கள்? பாருங்கள், நான் என்ன செய்ய முடியும்!’ என்ற மனநிலையில் விளையாடுகிறார்,” என்று அஸ்வின் விளக்கியுள்ளார்.

அஸ்வினின் கருத்துப்படி, விராட் கோலியின் அந்த உணர்ச்சிபூர்வமான கொண்டாட்டங்கள், வெறும் மகிழ்ச்சி அல்ல – அது ஒரு “பதிலடி”, ஒரு “சவால்”, மற்றும் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவில் தனது சொந்த முத்திரையை மீண்டும் அழுத்தமாக பதிக்கும் முயற்சி என்பதைத் தெளிவாக்குகிறது.

LATEST Post

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net