சுவிட்சர்லாந்தின் நீதிமன்றங்கள் 2024ஆம் ஆண்டில் 2,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்களை நாடுகடத்த உத்தரவிட்டுள்ளன. இதுகுறித்து புலம்பெயர்தலுக்கான மாகாணச் செயலகம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த உத்தரவுகளின் படி, மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானோர் – அதாவது சுமார் 1,350 பேர் – ஏற்கனவே சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறிவிட்டதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் 80% பேர் கட்டாய நாடுகடத்தலின் கீழும், மீதமுள்ள 20% பேர் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
நாடுகடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 25 முதல் 34 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆவர். அல்பேனியா நாட்டவர்கள்தான் அதிக அளவில் நாடுகடத்தப்பட்டுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து, ரொமேனியா மற்றும் அல்ஜீரியா நாட்டவர்கள் அதிகம் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

