கொல்லப்பட்ட காதலனின் உடலைத் திருமணம் செய்த இளம்பெண் – மகாராஷ்டிராவில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்

காதலனின் உடலைத் திருமணம் செய்த இளம்பெண்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில், தனது குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்ட காதலனின் உடலைத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவரின் செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சஷ்கம் டேட் (20) மற்றும் ஆஞ்சல் மாமித்வார் (21) மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆஞ்சலின் பெற்றோர் இந்த உறவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சமீபத்தில், குடும்பத்தினர் திருமணத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறி, சஷ்கத்தை வீட்டுக்கு அழைத்தனர். ஆனால் இது ஒரு திட்டமிட்ட பொய் என்பது பின்னர் வெளிப்பட்டது.

திருமண விழாவில், ஆஞ்சலின் உறவினர்கள் சஷ்கத்தை அடித்துத் தாக்கினர். அப்போது, ஆஞ்சலின் தம்பி துப்பாக்கியால் சூடு நடத்த, கடுமையாக அடிக்கப்பட்ட சஷ்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த இறுதிச்சடங்குக்கு முன்னதாக, ஆஞ்சல் தனது மூன்று ஆண்டு காதலனை இழக்கும் துயரத்தில், அவரது உடலுடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்.

இந்த உணர்ச்சிபூர்வமான காட்சிகள் இணையத்தில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் ஆதங்கத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

ஆஞ்சல் தெரிவிக்கையில், “அவர்கள் திருமணம் செய்வதாக நடித்து, சஷ்கத்தை நம்ப வைத்து கொலை செய்தனர். அவர் என் உயிர் துணை… அவரை இழப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை,” என்று கண்ணீர் மல்க கூறினார்.

இந்த கொடூர சம்பவத்தில், ஆஞ்சலின் தந்தை, சகோதரர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ‘கௌரவக் கொலை’ (Honour Killing) என வகைப்படுத்தப்பட்டு, மகாராஷ்டிரா காவல்துறை விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net