டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்புவாரா? – விராட் கோலி கூறிய தெளிவான பதில்; சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

விராட் கோலி

இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பிரபல துடுப்பாட்ட வீரரான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுவார் என்ற தகவல்களுக்கு நேரடியாக பதில் அளித்துள்ளார்.

கோலி, கடந்த மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தற்போது அவர் ஒருநாள் வடிவத்தில் மட்டுமே ஆடி வருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 120 பந்துகளில் 135 ரன்கள் எடுத்த அவர், அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார்.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒயிட்-வாஷ் அடைந்தது. அனுபவமிக்க வீரர்கள் குறைந்ததால் ஏற்பட்ட தோல்வி என பலரும் கருத்து தெரிவித்ததால், பிசிசிஐ கோலி மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பப் பேசிவருவதாக செய்திகள் வெளியானது.

இது குறித்து இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கேவின் பீட்டர்சன், “கோலி, ரோஹித் போன்ற நட்சத்திரங்கள் மீண்டும் டெஸ்டில் விளையாடத் தயாராக இருந்தால், அதை உடனடியாக மதிக்க வேண்டும். அவர்கள் விளையாட விரும்பினால் அவர்கள் கண்டிப்பாக விளையாட வேண்டும்” என்று கூறி ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த தகவல்களுக்கு விராட் கோலி தானே விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது: “எனக்கு இப்போது 37 வயது. முன்புபோல் அனைத்தையும் எளிதாக செய்ய முடியாது. 300க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகள் விளையாடியுள்ளேன்; என் உடல் எந்த அளவு சுமையைத் தாங்கும் என்பதை நன்றாகவே அறிவேன். இனி நான் ஒருநாள் கிரிக்கெட்டிலேயே கவனம் செலுத்துவேன். என் உடலைச் சரியாகப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.”

இதன் மூலம், கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பும் திட்டம் இல்லை என்பதை தெளிவாகக் கூறியுள்ளார்.

LATEST Post

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net