பிரித்தானியாவில் கல்வி பயில மாணவர் விசாவில் நுழைந்து, படிப்பு முடிந்ததும் புகலிடம் கோரும் நடைமுறை அதிகரித்து வருவதாக பிரித்தானிய அரசு கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விஜயம் செய்துள்ள இங்கிலாந்தின் இந்தோ-பசிபிக் அமைச்சர் சீமா மல்ஹோத்ரா, பிபிசிக்கு அளித்த பேட்டியில், இத்தகைய விசா துஷ்பிரயோகம் குறித்து தெளிவாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதிய குடியேற்றச் சீர்திருத்தங்களின்படி, 2021 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் புகலிடம் கோரியவர்கள், அங்கு நிரந்தர குடியுரிமைக்கு 20 ஆண்டுகளும், காலவரையற்ற விடுப்பு (Indefinite Leave to Remain – ILR) பெற 10 ஆண்டுகளும் காத்திருக்க வேண்டும்.
2023 ஆம் ஆண்டில் மட்டும் 16,000 சர்வதேச மாணவர்கள் புகலிடம் கோரியுள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டின் ஜூன் வரை 14,800 மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் உள்துறை அலுவலகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த எண்கள், சட்டப்பூர்வ மாணவர் விசா வழியை புலம்பெயர்விற்கான தவறான வாயிலாக பயன்படுத்துவதைக் காட்டுவதாக மல்ஹோத்ரா வலியுறுத்தியுள்ளார்.
“மக்கள் சட்டப்பூர்வமாக நாட்டிற்குள் நுழைந்து, விசா காலாவதியான பின்னரும் சட்டவிரோதமாக தங்க முயற்சிப்பது குறித்து நாங்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


