ஸ்மிருதி மந்தனா – பலாஷ் திருமணம் நிறுத்தம்: “இருவரும் வலியில்…” — பலாஷ் தாயார் முதன்முறையாக விளக்கம்

பகிர்
WhatsApp Google News Facebook Post Telegram

மும்பை: இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டதால் இரு குடும்பங்களும் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில், மாப்பிள்ளை பலாஷ் முச்சல்லின் தாயார் அமிதா முச்சல் மௌனத்தை உடைத்து உருக்கமான விளக்கமொன்றை வழங்கியுள்ளார். “ஸ்மிருதியும் பலாஷும் இப்போது மிகுந்த மன வேதனையில் உள்ளனர்,” என அவர் கூறியுள்ளார். இதே நேரத்தில், பலாஷ் முச்சலைச் சுற்றி பரவும் ஒரு புதிய வதந்தி சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

சாங்லியில் ஸ்மிருதி–பலாஷ் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் திருமணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு அறிகுறிகள் தென்பட்டதால் அவர் அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் மனஅழுத்தம் காரணமாக பலாஷும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இருவரும் தற்போது நலம் பெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஸ்மிருதி மந்தனா
படம்: ஸ்மிருதி மந்தனா – பலாஷ் திருமணம் நிறுத்தம்: “இருவரும் வலியில்…” — பலாஷ் தாயார் முதன்முறையாக விளக்கம்

இந்த சூழலில் பேசிய பலாஷின் தாய் அமிதா முச்சல், “என் மகன் தனது மணப்பெண்ணுடன் வீட்டிற்கு வரும் நாளை நான் ஆவலுடன் காத்திருந்தேன். மருமகள் ஸ்மிருதியை வரவேற்க பல ஏற்பாடுகளும் செய்திருந்தேன். நடந்தது எங்களுக்குப் பெரிய அதிர்ச்சி. இருந்தாலும், எல்லாம் விரைவில் சீராகும்; திருமணம் நிச்சயம் நடக்கும் என்று நான் நம்புகிறேன்,” என உணர்ச்சியுடன் தெரிவித்தார்.

இதற்கிடையில், பலாஷ் முச்சல் சமூக வலைதளத்தில் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமான உரையாடலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சில ஸ்கிரீன்‌ஷாட்கள் வைரலாகி வருகின்றன. இந்த ‘சாட் சர்ச்சை’ தான் திருமணம் தடைபட்டதற்கும், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து திருமணப் புகைப்படங்களை நீக்கியதற்கும் காரணமா என்ற கேள்வி நெட்டிசன்கள் இடையே எழுந்துள்ளது. ஆனால், இந்த வதந்திக்கான எந்த விளக்கமும் பலாஷ் தரப்பிலிருந்து இதுவரை வெளியாகவில்லை.

இந்த கடினமான நிலைமையில் ஸ்மிருதிக்கு துணையாக இருக்க, அவரது நெருங்கிய தோழி ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் WBBL தொடரிலிருந்து விலகி இந்தியா திரும்பியுள்ளார்.

இருப்பினும், இரு குடும்பங்களும் தற்போது உடல்நல மீட்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தருகின்றன.

மூலம்: Colombo Tamil · திருத்தம் வேண்டுமா? எங்களுக்குத் தெரிவிக்கவும்