சொந்த மண்ணில் தோல்வி – கம்பீர் பேச்சால் பிசிசிஐ அதிருப்தி; 2026 T20 உலகக்கோப்பை ‘கடைசி வாய்ப்பு’

கம்பீர் பேச்சால் பிசிசிஐ அதிருப்தி

மும்பை: தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறிய கருத்துகள் பிசிசிஐ நிர்வாகத்தை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைக்கு அவருக்கு எதிராக நேரடி நடவடிக்கை எடுக்கப்படாதாலும், 2026–ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை அவரது பயிற்சிப் பதவிக்கான ‘இறுதி சோதனை’ என பிசிசிஐ பார்க்கிறது.

இந்தியா, கொல்கத்தா மற்றும் கவுகாத்தி போட்டிகளில் மோசமாக விளையாடி 0–2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. குறிப்பாக கொல்கத்தா டெஸ்டில் சுழற்பந்து ஏற்ற ஆடுகளத்தில் இந்திய அணி 93 ரன்களுக்குத் துவண்டது.

அந்த முதல் டெஸ்ட் முடிந்தபின், “இந்த மாதிரி ஆடுகளத்தையே நாங்களே கேட்டோம்; அது நம்மை சொல்லாமல் வெளிப்படுத்திவிட்டது. சரியாக விளையாடாதால் இப்படிதான் நடக்கும்,” என கம்பீர் வெளிப்படையாக தெரிவித்தது பிசிசிஐக்கு பிடிக்கவில்லை.
“சொந்த மண்ணிலேயே அணியை சிரமத்தில் ஆழ்த்தும் பிட்ச் கேட்டுக் கொண்டதென்ன? அதிலும் தோற்ற பிறகு பெருமையாகச் சொல்லுவது எதற்காக?” என நிர்வாகம் கேள்வி எழுப்பியுள்ளது.

கம்பீரிடம் அதிருப்தி இருந்தாலும், அவரை உடனடியாக நீக்க பிசிசிஐ விரும்பவில்லை. காரணம் – மாற்று தலைமைப் பயிற்சியாளர் யாரும் தற்போது கைவசம் இல்லை; மேலும் டெஸ்ட், ஓடிஐ, T20 ஆகியவற்றிற்கு தனித்தனி பயிற்சியாளர் நியமிக்கவும் இப்போது திட்டமில்லை.

அதே நேரத்தில், கம்பீரின் பதவி அபாயத்திலிருந்து தப்பவில்லை.
2026 T20 உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்தால், கம்பீர் நிச்சயம் பதவியை இழப்பார் என பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், உதவிப் பயிற்சியாளர் சிதன்ஷு கோடக் கம்பீரை ஆதரித்து, “பிட்ச் நிர்வாகிகளுக்கு பழி விழக்கூடாது என்பதற்காகவே கம்பீர் அதைத் தன் மீது எடுத்துக்கொண்டார். பேட்ஸ்மேன்களின் தோல்வியை யாரும் பேசுவதில்லை; எல்லோரும் கம்பீரை மட்டுமே குறிவைக்கிறார்கள்,” என தெரிவித்துள்ளார்.

ஆனால் கோடக்கின் விளக்கமும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net