இந்திய பேட்டிங் முழுமையாக தோல்வி: டெஸ்ட் மனநிலையில் பெரிய குறைபாடு என கும்ப்ளே கடும் விமர்சனம்

இந்திய பேட்டிங்

இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி 201 ரன்களில் சரிந்து 288 ரன்கள் பின்தங்கியுள்ளது.

போட்டியின் சூழ்நிலையை கவனிக்காமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தாக்குதல்மிகு அணுகுமுறையுடன் விளையாடி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர். குறிப்பாக யான்செனின் பவுன்சர்களை சமாளிக்க முடியாமல் அசைந்தனர்.

இந்த சூழ்நிலையில், இந்திய பேட்ஸ்மேன்களின் டெஸ்ட் போட்டிக்கான அடிப்படை மனநிலை மற்றும் அணுகுமுறையே மிஸ்சிங் என முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கடுமையாக விமர்சித்துள்ளார்.

கும்ப்ளே கூறியதாவது:

“இந்தியாவின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் தேவையான பொறுமையும், ‘அப்ப்ளிக்கேஷன்’-வும் தெளிவாக காணப்படவில்லை. சில உயர்தர பந்துகள் வீசப்பட்டாலும், பேட்ஸ்மேன்கள் கடினமான ஸ்பெல்ல்களை சமாளிக்கும் மனப்பக்குவம் காணவில்லை.

செஷன் வாரியாக விளையாட வேண்டிய அவசியத்தை அவர்கள் உணரவில்லை.

489 ரன்களை ஒரே சமயத்தில் ‘வேகமாக’ அடைய நினைத்ததே தவறு. டெஸ்ட் போட்டியில் அது பொருந்தாது. எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு மரியாதை அளித்து விளையாட வேண்டும்; ஆனால் இந்தியா அதை பின்பற்றவில்லை.

யான்சன் அபாரமாக பந்து வீசி, இந்தியர்களை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்தார்.

அவர் பவுன்சர்களை வீசத் தொடங்கியபோது, அதை தவிர்க்கவோ சமாளிக்கவோ இந்திய பேட்ஸ்மேன்களுக்கு திட்டமோ தயார் மனநிலையோ இல்லை போல இருந்தது.

சவாலான சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க வேண்டிய டெஸ்ட் அணுகுமுறை இன்றைய இந்திய அணியில் காணப்படவில்லை.”

இவ்வாறு அனில் கும்ப்ளே தெரிவித்தார்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net