இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளும் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (பிரிஸ்பேனில்) நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து ஆனது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், 3-வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.
நேற்று முன்தினம் நடந்த 4-வது போட்டியில் இந்தியா அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன் மூலம், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
கடைசி போட்டியான இது, இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்குகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடந்த 2 போட்டிகளிலும் வெற்றியைப் பெற்றதால், இன்றைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் களம் இறங்க உள்ளது. இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா இருக்கிறது.
இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்களில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா ஆகியோர் உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் ஷிவம் துபே, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி போன்றோர் உள்ளனர்.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்த முக்கியமான ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும்.
ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், இங்லிஸ், ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் தொடரை கைப்பற்றும் மற்றும் சமன் செய்யும் முனைப்பில் இருப்பதால், இந்த கடைசி டி20 போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



