மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியுள்ளது. இந்தப் பின்னடைவைத் தொடர்ந்து, இந்திய அணியின் தேர்வில், குறிப்பாக பயிற்சியாளர் கம்பீர் எடுத்த முடிவுகள் மீது கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். கடைசியாக விளையாடிய ஒன்பது சர்வதேச T20 போட்டிகளில் கில், மொத்தமாகவே 169 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.
இந்த காலகட்டத்தில் அவருடைய சராசரி 24 என்ற அளவில் இருக்கின்றது. ஏற்கனவே திறமையான வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக உள்ளனர்.
கில்லின் தேர்வு குறித்து விமர்சனம் வைக்கும் ரசிகர்கள், கில் தேவையில்லாமல் தொடக்க வீரராக கொண்டுவரப்பட்டு துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று குறை கூறுகின்றனர். பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தபோது, கில்லின் பேட்டிங் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் டி20 கிரிக்கெட்டுக்கு ஒத்துவரவில்லை என்று கூறி தான் அவரை அணியை விட்டு நீக்கினார். ஆனால் தற்போது பயிற்சியாளர் கம்பீர், டெஸ்ட் போட்டியில் கில் சிறப்பாக விளையாடியதை பாராட்டி, அவருக்கு டி20 போட்டியில் இடம் கொடுத்திருக்கின்றார்.

இந்த டி20 தொடர் முடிவடைந்த உடன், அடுத்த நான்கு நாட்களில் தென்னாப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கின்றது. இதன் காரணமாக கில்லுக்கு சிறிதும் ஓய்வே இல்லாமல் அடுத்தடுத்து தொடர்கள் விளையாடினால், அது அவருடைய பேட்டிங்கை தான் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் “எதையும் கிழிக்காத” கில் தொடர்ந்து போட்டிகளில் விளையாடினால், அது அவருடைய ஃபார்மை மேலும் பாதித்து கேப்டன்ஷிப்பையும் பாதிக்க வைக்கும்.
கில் தேர்வு செய்யப்பட்டது மட்டுமின்றி, பந்துவீச்சாளர் தேர்வும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய ஆர்ஸ்தீப் சிங் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக ஹர்ஷித் ரானாவால் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹர்சித் ரானாவின் ஓவரரை நேற்று ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால், ஆர்ஸ்தீப் சிங் என்ற இடதுகை வேகப்பந்துவீச்சாளரை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதன் காரணமாக, கிரிக்கெட் வல்லுநர்கள் கில்லை டி20 கிரிக்கெட்டில் சேர்க்கக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். அதற்கு பதில் சஞ்சு சாம்சனை தொடக்க வீரராகவும் அல்லது ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராகவும் சேர்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒட்டுமொத்தமாக, நன்றாக இருந்த அணியை பயிற்சியாளர் கம்பீர் தேவை இல்லாமல் வீணடிப்பதாக ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர்.
மேலும் செய்திகள்





