துபாயில் நடைபெற்ற 17-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, கோப்பையை வழங்குவதில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) வலியுறுத்தலைத் தொடர்ந்து, ஆசிய கோப்பை தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) பிராந்திய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்தவுடன், இந்திய அணிக்கு பரிசுக் கோப்பையை வழங்க இருந்தவர் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனும், பாகிஸ்தான் உள்துறை மந்திரியுமான மொசின் நக்வி ஆவார்.
ஆனால், மொசின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி மறுத்துவிட்டது. அதற்குப் பதிலாக, ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் கலீத் அல்ஜரூனிடம் இருந்து கோப்பையைப் பெற்றுக்கொள்கிறோம் என்று இந்திய அணி கூறியது.
இதனை ஏற்க மறுத்த மொசின் நக்வி, கோப்பையைத் தன்னோடு எடுத்துக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். இதன் காரணமாக, இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்படவில்லை, மேலும் இந்திய வீரர்கள் வெறுங்கையுடன் வெற்றியை கொண்டாடும் நிலை ஏற்பட்டது.
இந்தக் கோப்பை பிரச்சினை குறித்து, துபாயில் நேற்று நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் எழுப்பப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதிகளாக துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் முன்னாள் பொருளாளர் ஆஷிஷ் ஷிலார் ஆகியோர் கலந்துகொண்டு எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
அவர்கள், “வெற்றி பெற்ற அணியிடம் கோப்பையை வழங்க வேண்டும். இது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கோப்பையாகும். தனிப்பட்ட நபருக்கு சொந்தமானது கிடையாது” என்று தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். இருப்பினும், கோப்பையை வழங்கமாட்டோம் என்ற முடிவில் இருந்து மொசின் நக்வி பின்வாங்கவில்லை. இதனால், ஆசிய கோப்பை இந்தியாவுக்கு எப்போது வரும் என்பதில் நிச்சயமற்ற நிலை நீடித்து வந்தது.
ஆசியக் கோப்பையை இந்தியாவுக்கு அனுப்புமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல்களின்படி, போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்திடம் மொசின் நக்வி, கோப்பையை ஒப்படைத்துள்ளார்.
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வென்ற ஆசிய கோப்பை, தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) பிராந்திய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிய கோப்பை விரைவில் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



