சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்னில் ஆல்-அவுட் ஆக 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
வில்லியம்சன் 81 ரன்கள் அடித்தார். இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாக 13-வது முறையாக டாஸில் தோல்வியை தழுவி, தொடர்ச்சியாக அதிக டாஸ் தோற்ற அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.
அத்துடன், இந்திய கேப்டன் ரோகித் சர்மா தொடர்ச்சியாக சந்தித்த 10-வது டாஸ் தோல்வி இதுவாகும் என்பதால், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக டாஸ் தோல்விகளை சந்தித்த 3-வது கேப்டன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
அந்த பட்டியலில் பிரையன் லாரா 12 முறை டாஸ் தோல்வியுடன் முதலிடத்தில் உள்ளதுடன், பீட்டர் போரேன் 11 முறை டாஸ் தோல்வியுடன் இரண்டாவது இடத்தில் இருக்கின்றார்.








