வெளிநாட்டுப் பெண்கள் வன்கொடுமை வழக்கு: பாக். துணைப் பிரதமர் பேரன் மீது குற்றப்பத்திரிகை

வெளிநாட்டுப் பெண்கள் இருவரைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தாரின் பேரன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக லாகூர் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.


வெளிநாட்டுப் பெண்கள் வன்கொடுமை வழக்கு: பாக். துணைப் பிரதமர் பேரன் மீது குற்றப்பத்திரிகை

வெளிநாட்டுப் பெண்கள் இருவரைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தாரின் பேரன் முகமது ரசா தார் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக லாகூர் மேலதிக மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் உத்தியோகபூர்வமாகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

மேலதிக மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ரபாகத் அலி கொண்டல் முன்னிலையில் இவ்விசாரணை இடம்பெற்றது. இதன்போது, குற்றச்சாட்டுகளை வாசித்துக் காட்டிய நீதிபதி, அரசுத் தரப்பு சாட்சிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். எனினும், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முகமது ரசா தார் உள்ளிட்ட 8 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர்.

காவல்துறை விசாரணை அறிக்கையின்படி, நெதர்லாந்து மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரு வெளிநாட்டுப் பெண்களும் 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் வைத்து முகமது ரசா தாரைச் சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் முன்னெடுத்து வந்த கிரிப்டோகரன்சி (Cryptocurrency) வர்த்தகத்தில் முதலீடு செய்யுமாறு ரசா தாரை அழைத்துள்ளனர்.

ஆரம்ப முதலீட்டில் இலாபம் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் அப்பெண்களின் நிறுவனத்தில் முதலீடு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அதற்கான இலாபத்தையோ அல்லது அசல் முதலீட்டுத் தொகையையோ அப்பெண்கள் திருப்பி வழங்கவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த நிதிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வேறொரு முதலீட்டாளரை அறிமுகப்படுத்தி வைப்பதாகக் கூறி, கடந்த ஜூன் மாதம் அப்பெண்கள் இருவரையும் முகமது ரசா தார் பாகிஸ்தானுக்கு அழைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் லாகூரிலுள்ள வீடொன்றில் அப்பெண்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்த சந்தேகநபர்கள், ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தியதுடன், பணத்தைத் திருப்பித் தராவிட்டால் கொலை செய்து உடல் உறுப்புகளை விற்றுவிடுவதாக மிரட்டியதாகக் காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவர்களிடமிருந்து 19,500 அமெரிக்க டொலர்கள் வலுக்கட்டாயமாகப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், முகமது ரசா தார் மற்றும் அவருடன் இருந்தவர்கள் இணைந்து தம்மைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண்கள் முறைப்பாடு அளித்திருந்தனர். மருத்துவப் பரிசோதனைகளிலும் அப்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

முன்னதாகப் பஞ்சாப் காவல்துறை சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில், பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டிலிருந்து ரசா தார் உள்ளிட்ட 5 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு, ஏனைய மூவர் மீது மாத்திரம் அக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், காவல்துறையின் அவ்வறிக்கையைத் தாண்டி, தற்போது 8 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் நீதிமன்றம் உத்தியோகபூர்வமாகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Colombo Tamil-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க