ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு குறைவு: ட்ரம்ப்

ஈரானுடனான பேச்சுவார்த்தையில் வலுவான ஒப்பந்தம் ஏற்பட்டால் புதிய தாக்குதல்களுக்கு வாய்ப்பு குறைவு என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் நீடிக்கிறது.


ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு குறைவு: ட்ரம்ப்

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடைந்தால், அந்நாட்டின் மீது மீண்டும் பாரிய இராணுவத் தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) CNN செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலின்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஈரானுடன் வலுவான ஒப்பந்தமொன்றை எட்டுவதிலேயே அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான முடிவு தங்கியிருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

ஈரானுக்கு எதிராக மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுமா எனக் கேட்கப்பட்டபோது, அது பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்திருக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் தரப்பு ஏற்றுக்கொள்ளக்கூடிய வலுவான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் புதிய இராணுவ நடவடிக்கைகள் தேவையற்றதாக அமையலாம் என்பதே அவரது கருத்தாகும்.

எனினும், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பை அவர் முழுமையாக நிராகரிக்கவில்லை.

ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது ஆகியவை பேச்சுவார்த்தைகளில் முக்கிய விடயங்களாக இடம்பெறுகின்றன.

பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் தாக்குதல்கள் தேவையில்லை என்று தெரிவித்துள்ள ட்ரம்ப், அதேநேரத்தில் ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகள் தொடர்பாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானில் உள்ள 38 பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை அமெரிக்கா சாத்தியமான தாக்குதல் இலக்குகளாக அடையாளம் கண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தேவை ஏற்பட்டால் குறுகிய நேரத்திற்குள் அவற்றைத் தாக்கும் திறன் அமெரிக்காவிடம் இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

இவை அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட எச்சரிக்கைகளாகும். குறித்த பாலங்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 

அமெரிக்கா மீண்டும் இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்தால் அதற்குப் பதிலடி வழங்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்தாலும், பிராந்தியத்தில் இராணுவப் பதற்றம் முழுமையாகத் தணியவில்லை. 

இதற்கிடையில், ஈரானின் தென்பகுதியில் சனிக்கிழமை சில இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள கெஷ்ம் (Qeshm) தீவு உள்ளிட்ட பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், அவை அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல்களால் ஏற்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

குறித்த சம்பவங்கள் ஈரானிய இராணுவ நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Colombo Tamil-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க