செயற்கைக் கையுடன் வயலின் வாசித்து கின்னஸ் சாதனை படைத்த ஜப்பானியக் கலைஞர்
செயற்கைக் கையுடன் வயலின் வாசித்த முதல் கலைஞர் என்ற பெருமையுடன் ஜப்பானைச் சேர்ந்த 42 வயதான மனாமி இடோ 2027 கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
செயற்கைக் கையுடன் வயலின் வாசித்து உலக சாதனை படைத்த ஜப்பானியப் பெண் இசைக் கலைஞர் மனாமி இடோ (42), 2027ஆம் ஆண்டிற்கான கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக இடம்பிடித்துள்ளார்.
"முழுமையான செயற்கைக் கையுடன் வயலின் வாசித்த முதல் கலைஞர்" என்ற சிறப்பைப் பெற்று அவர் இச்சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
சிறுவயது முதலே வயலின் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த மனாமி இடோ, 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் தனது வலது கையை இழந்தார். இதனால் தனது இசைப் பயணம் முற்றுப்பெற்றுவிட்டதாக அவர் ஆரம்பத்தில் கருதினார்.
எனினும், மனம் தளராத அவர் தமக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட செயற்கைக் கையைப் பொருத்திக்கொண்டு மீண்டும் வயலின் வாசிப்பதற்கான தீவிரப் பயிற்சிகளில் ஈடுபட்டார்.
அதன் பயனாக, 2012ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5ஆம் திகதி ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்ற மருத்துவ மாநாடொன்றில் பார்வையாளர்கள் முன்னிலையில் வயலின் வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
தனது சாதனைப் பயணம் குறித்து மனாமி இடோ நினைவுகூர்கையில், விபத்திற்குப் பின்னர் உணவு உண்ணும் குச்சிகளைக் கூடப் பிடிக்க முடியாமல் தாம் தவித்ததைப் பார்த்த தாயார், இனிமேல் வயலின் வாசிக்க முடியாது என வேதனையுடன் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தமக்காக ஒருநாள் வயலின் வாசித்துக் காட்டுமாறு தாயார் முன்னர் கேட்டிருந்த விடயம் நினைவுக்கு வந்ததால், அந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற வைராக்கியத்துடனேயே மீண்டும் பயிற்சியைத் தொடங்கியதாக அவர் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் பிறர் தன்னைப் பார்ப்பதைத் தவிர்த்து பலவீனமாக உணர்ந்ததாகவும், பொதுமேடையில் வாசிக்கும் தன்னம்பிக்கையைப் பெறுவதற்கு மூன்று ஆண்டுகள் எடுத்ததாகவும் மனாமி இடோ தெரிவித்துள்ளார். தனக்காகச் செயற்கைக் கையை உருவாக்கித் தந்தவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகப் பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வயலின் கலைஞராக மாத்திரமன்றி, ஜப்பானில் செயற்கைக் கையுடன் பணியாற்றிய முதலாவது தாதியர் (செவிலியர்) என்ற பெருமையையும், பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை என்ற சிறப்பையும் மனாமி இடோ பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.