ரஷ்யர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை; டென்மார்க் வலியுறுத்தல்
ரஷ்ய உளவுத்துறையின் படுகொலை முயற்சியைத் தடுத்ததைத் தொடர்ந்து டென்மார்க் விடுத்த வலியுறுத்தலின் பேரில், ஷெங்கன் மண்டலத்திற்குள் ரஷ்யப் பிரஜைகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகின்றது.
ரஷ்ய உளவுத்துறையால் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் படுகொலை முயற்சியொன்றைத் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு டென்மார்க் தனது சக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து, ஐரோப்பா முழுவதும் ரஷ்யப் பிரஜைகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகின்றது.
கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க - உக்ரேனிய இசைக் கலைஞர் ஒருவர் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்கு முன்னதாக, அவரைக் கொலை செய்வதற்கு ரஷ்ய உளவு அமைப்புகள் மேற்கொண்ட முயற்சியைத் தடுத்து நிறுத்தியதாக டென்மார்க் பொலிஸாரும் பாதுகாப்பு அதிகாரிகளும் வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாத அத்துமீறல் எனச் சாடியுள்ள டென்மார்க் வெளிவிவகார அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென் (Lars Lokke Rasmussen), ரஷ்யாவின் பாதுகாப்பு இணை அதிகாரியை (Defence Attache) நாட்டிலிருந்து வெளியேற்றுவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், 29 நாடுகளை உள்ளடக்கிய 'ஷெங்கன்' (Schengen) சுதந்திரப் பயண மண்டலத்திற்குள் ரஷ்யப் பிரஜைகள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட இராஜதந்திரிகள் முன்மொழிந்துள்ளனர்.
இதற்கமைய, ரஷ்யப் பிரஜைகளுக்கான சுற்றுலா விசாக்களை இடைநிறுத்துவதற்கும், ஷெங்கன் மண்டலம் முழுவதும் ரஷ்யாவின் பயோமெட்ரிக் அல்லாத (Non-biometric) கடவுச்சீட்டுகளை அங்கீகரிப்பதை நிறுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டென்மார்க் தனது இம்முன்மொழிவுகளை எதிர்வரும் திங்கட்கிழமை பிரஸ்ஸல்ஸில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதர்களின் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
மேலும், ஷெங்கன் மண்டலம் முழுவதிலும் பயணம் செய்ய அனுமதியளிக்காத வரையறுக்கப்பட்ட விசாக்களை அதிகளவில் பயன்படுத்துமாறும், ரஷ்யாவின் தற்போதைய மற்றும் முன்னாள் போராளிகளுக்கு நுழைவுத் தகுதி தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் சிரேஷ்ட இராஜதந்திரிகளின் குறிப்பில் உறுப்பு நாடுகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, கோபன்ஹேகனில் உள்ள ரஷ்யத் தூதரகம், டென்மார்க்கின் இக்குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என வெள்ளிக்கிழமை பதிலளித்துள்ளது.
இச்சூழலில், டென்மார்க்குடனும் ரஷ்யாவின் கலப்பினத் தாக்குதல்களால் குறிவைக்கப்படும் அனைத்து உறுப்பு நாடுகளுடனும் ஐரோப்பிய ஒன்றியம் முழுமையான ஒற்றுமையுடன் நிற்பதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயன் (Ursula von der Leyen) தெரிவித்துள்ளார்.
தயார்நிலையையும் தடுப்பு நடவடிக்கைகளையும் வலுப்படுத்தும் நோக்கில் விரைவில் புதிய ஐரோப்பிய பாதுகாப்பு உத்தியொன்று முன்மொழியப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஐந்து ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான 22 ஆவது தடைகள் தொகுப்பை ஐரோப்பிய ஆணையம் விரைவில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், விசா கட்டுப்பாடுகளும் அதில் உள்ளடக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.