பிரித்தானியாவில் கோதுமை மாவில் ஃபோலிக் அமிலம் சேர்ப்பது கட்டாயம்; டிசம்பர் 13 முதல் புதிய சட்டம் அமுல்
பிரித்தானியாவில் பிறவிக் குறைபாடுகளைத் தடுக்கும் நோக்கில், கோதுமை மாவில் ஃபோலிக் அமிலம் சேர்ப்பதைக் கட்டாயமாக்கும் புதிய சட்டம் 2026 டிசம்பர் 13 முதல் அமுலுக்கு வரவுள்ளது.
பிரித்தானியாவில் கோதுமை மாவில் ஃபோலிக் அமிலம் (Folic Acid) சேர்ப்பதைக் கட்டாயமாக்கும் புதிய சட்டம் எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி முதல் முழுமையாக அமுலுக்கு வரவுள்ளது. இந்த நடவடிக்கையின் ஊடாக வருடாந்தம் சுமார் 200 குழந்தைகள் கடுமையான பிறவிக் குறைபாடுகளிலிருந்து பாதுகாக்கப்படலாம் எனப் பிரித்தானிய அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
புதிய விதிமுறைகளுக்கு அமைய, பிரித்தானியச் சந்தைக்காக உற்பத்தி செய்யப்படும் முழுதானியமல்லாத (Non-wholemeal) கோதுமை மாவுகளில் 100 கிராம் மாவிற்கு 0.25 மில்லிகிராம் ஃபோலிக் அமிலம் கட்டாயமாகச் சேர்க்கப்பட வேண்டும். இந்த விதிமுறை வெள்ளை மாவு மற்றும் பழுப்பு நிற மாவுகளுக்குப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைட்டமின் பி (Vitamin B) குடும்பத்தைச் சேர்ந்த ஃபோலேட்டின் செயற்கை வடிவமே ஃபோலிக் அமிலமாகும். கர்ப்பத்தின் ஆரம்ப வாரங்களில் சிசுவின் மூளை மற்றும் முதுகெலும்பு உருவாகும் நிலையில் இது மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. கர்ப்பம் தரித்திருப்பது தெரியவருவதற்கு முன்னரே இச்சத்து அவசியப்படுவதால், பல பெண்களுக்கு இது போதிய அளவில் கிடைப்பதில்லை என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிரித்தானியாவின் உணவு தரநிலை முகமை (Food Standards Agency) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இம்மாவு செறிவூட்டும் திட்டமானது நரம்புக் குழாய் குறைபாடுகள் (Neural Tube Defects) ஏற்படும் விகிதத்தைச் சுமார் 20 சதவீதம் வரை குறைக்க உதவும். குறிப்பாக, ஸ்பைனா பிபிடா (Spina Bifida) போன்ற கடுமையான பிறவிக் குறைபாடுகளைத் தடுப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
முன்னதாகவே கோதுமை மாவில் கல்சியம், இரும்புச்சத்து, நியாசின் மற்றும் தையாமின் ஆகிய சத்துக்கள் சேர்க்கப்பட்டு வந்த நிலையில், இனி அவற்றுடன் ஃபோலிக் அமிலமும் இணைக்கப்படவுள்ளது. இம்மாற்றத்திற்காக மா உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 24 மாத இடைக்கால அவகாசம் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
எவ்வாறாயினும், இப்புதிய விதிமுறை முழுதானிய கோதுமை மாவு (Wholemeal flour) மற்றும் அரிசி, மக்காச்சோளம், ஸ்பெல்ட் போன்ற கோதுமை அல்லாத மாவு வகைகளுக்குப் பொருந்தாது. எனவே, மேலதிக ஃபோலிக் அமிலம் இல்லாத உணவுப் பொருட்களை விரும்பும் நுகர்வோருக்கு மாற்றுத் தெரிவுகள் தொடர்ந்தும் கிடைக்கப்பெறும்.
உலகளவில் 80 இற்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே மாவு அல்லது அத்தியாவசிய உணவுப் பொருட்களில் ஃபோலிக் அமிலம் சேர்ப்பதைக் கட்டாயமாக்கியுள்ள நிலையில், அவ்வரிசையில் தற்போது பிரித்தானியாவும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.