உரிமையாளர் தூங்கிக் கொண்டிருந்தபோது இரவு முழுவதும் 868 முறை தானாகப் பார்க்கிங் செய்ய முயன்ற மின்சார கார்!

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உரிமையாளர் தூங்கிக் கொண்டிருந்தபோது, சாரதி இல்லாத மின்சார கார் ஒன்று இரவு முழுவதும் 868 முறை தானாகப் பார்க்கிங் செய்ய முயன்ற சம்பவம் வைரலாகியுள்ளது.


உரிமையாளர் தூங்கிக் கொண்டிருந்தபோது இரவு முழுவதும் 868 முறை தானாகப் பார்க்கிங் செய்ய முயன்ற மின்சார கார்!

சீனாவில் சாரதி இல்லாத மின்சார கார் ஒன்று, அதன் உரிமையாளர் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இரவு முழுவதும் தானாகவே பார்க்கிங் செய்ய முயன்று, 868 முறை தனது தானியங்கி பார்க்கிங் (Auto Parking) வசதியை இயக்கிய வினோத சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சீனாவின் அன்ஹுய் (Anhui) மாகாணத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் வாகனத் தரிப்பிடத்திலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது. அதிகாலை 3.00 மணியளவில் குறித்த வாகனம் தொடர்ச்சியாக முன்னும் பின்னுமாக நகர்வதை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தர், அருகில் சென்று சோதனையிட்டபோது காருக்குள் எவரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கமராக்களில் (CCTV) பதிவான காட்சிகளின்படி, காலியாக இருந்த பார்க்கிங் இடத்திற்குள் நுழைவதற்காக அந்த கார் முன்னும் பின்னுமாக நகர்ந்து, தனது நிலையை மாற்றியமைத்து மீண்டும் மீண்டும் பார்க்கிங் செய்ய முயற்சிப்பதும், ஒரு முயற்சி முடிந்தவுடன் அடுத்த முயற்சியைத் தொடங்குவதும் தெளிவாகத் தெரிகிறது.

மறுநாள் காலையில் காரின் உரிமையாளர் வாகனத்தின் தொழில்நுட்பச் செயற்பாட்டுப் பதிவுகளை ஆய்வு செய்தபோது, தானியங்கி பார்க்கிங் வசதி மொத்தமாக 868 தடவைகள் இயக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. பல மணித்தியாலங்களாகத் தொடர்ந்த இச்செயற்பாட்டின் இறுதியில், குறித்த கார் மற்றுமொரு வாகனத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில், சீனாவில் ஹுவாவே (Huawei) நிறுவனத்தின் 'Qiankun Intelligent Driving Open' எனும் சாரதி உதவித் தொழில்நுட்பப் போட்டி நடைபெற்றுள்ளது. ஒக்டோபர் 31 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெற்ற இப்போட்டியில் 1 இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் அதிகமான வாகன உரிமையாளர்கள் பங்கேற்றிருந்ததுடன், தானியங்கி பார்க்கிங் மற்றும் ரிமோட் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளைச் சிறப்பாகப் பயன்படுத்துவோருக்குப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, சில வாகன உரிமையாளர்கள் தமது போட்டிப் புள்ளிகளை அதிகரிக்கும் நோக்கில் பார்க்கிங் வசதியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எவ்வாறாயினும், போட்டி விதிமுறைகளுக்கு அமைய காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையான செயற்பாடுகள் மாத்திரமே மதிப்பீட்டிற்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதால், அதிகாலை வேளையில் நிகழ்ந்த இந்த 868 முயற்சிகளுக்கும் புள்ளிகள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

குறித்த கார் இவ்வாறு தொடர்ச்சியாகப் பார்க்கிங் செய்ய முயன்றமைக்கான உறுதியான காரணம் இதுவரை வெளியாகவில்லை. வாகனத் தரிப்பிடத்தில் வெளிச்சம் குறைவாக இருந்தமை, தரையில் வரையப்பட்ட கோடுகள் தெளிவாகத் தெரியாமை அல்லது குறுகிய இடத்தில் காரை நிறுத்த முடியாமை போன்ற காரணங்களாலோ அல்லது மென்பொருள் கோளாறு காரணமாகவோ வாகனம் மீண்டும் மீண்டும் முயற்சி செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அத்துடன், திறன்பேசி (Smartphone) செயலி ஊடாக உரிமையாளர் காரை வெளியே நகர்த்தி மீண்டும் பார்க்கிங் செய்யும் முயற்சியைத் தொடர்ந்திருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. எவ்வாறாயினும், கண்காணிப்பு கமரா காட்சிகளை மாத்திரம் கொண்டு எதனையும் உறுதிப்படுத்த முடியாது என்பதுடன், காரின் தொழில்நுட்பப் பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்தால் மட்டுமே உண்மையான காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Colombo Tamil-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க