ஈரானின் ரேடாரில் சிக்காமல்… 70 கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியே பாதுகாப்பாக வெளியேற்றிய அமெரிக்கா

ஹார்முஸ் நீரிணை

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் நிலவி வந்தபோதிலும், சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களும், அதற்குப் பதிலடியாக குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களும் மத்திய கிழக்கில் பதற்றத்தை மீண்டும் அதிகரித்துள்ளன.

இதற்கிடையே, ஹார்முஸ் நீரிணை வழியே வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பாக வழிநடத்தும் பணியை அமெரிக்க ராணுவம் இரகசியமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த மூன்று வாரங்களில் 70 வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பாக ஹார்முஸ் நீரிணை வழியே வெளியேற்றியுள்ளது. இந்த 70 கப்பல்களும் பாரசீக வளைகுடாவிற்குள் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் வழித்தடங்களில் இயக்கப்பட்டுள்ளன.

ஈரானின் பாதுகாப்பு ரேடார்களில் சிக்காமல் இருக்க, ‘இருண்ட பயணம்’ (Dark Passage) என்ற இரகசிய வழிசெலுத்தல் தந்திரோபாய முறையை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த 70 வணிகக் கப்பல்களும் தங்களின் இருப்பிடத்தைக் காட்டும் டிரான்ஸ்பாண்டர் சமிக்ஞைகளை முழுமையாக அணைத்து வைக்குமாறு அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகம் (CENTCOM) அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, ஈரானிய ரேடார்களால் இக் கப்பல்களைக் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அத்துடன், ஈரானின் கடற்கரையை ஒட்டிச் செல்வதற்குப் பதிலாக, இந்தக் கப்பல்கள் ஓமான் கடற்கரைக்கு அருகில் செல்லும் பாதையில் வழிநடத்தப்பட்டுள்ளன. ஈரானின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து விலகிச் செல்லும் இந்தப் பாதை, கப்பல்கள் மீதான தாக்குதல் அபாயத்தையும் கணிசமாகக் குறைத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். கப்பல் நிறுவனங்கள் ஈரானிய அனுமதியைப் பெறுவதையோ அல்லது கட்டணம் செலுத்துவதையோ தவிர்ப்பதற்கு இந்த அமெரிக்க வழிகாட்டல் ஒரு மாற்று வழியை வழங்கியுள்ளது.

இருப்பினும், அமெரிக்க ராணுவம் இந்தக் கப்பல்களுக்கு நேரடிப் பாதுகாப்பு (Escort) அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு மூலமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு பயணிப்பதால், இந்த நீரிணையைத் திறந்து வைப்பது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். இதற்கிடையே, அமெரிக்காவும் ஈரானும் இந்த நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்துவருகின்றன.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net