லண்டன், ஒக்டோபர் 26: பிரித்தானியாவைத் தாக்கியுள்ள ‘Boelo’ புயல் காரணமாக பல பகுதிகளில் கடும் காற்று, கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், புயலின் தாக்கத்தால் ஞாயிற்றுக்கிழமை (25) மாலை நிலவரப்படி 90,000க்கும் அதிகமான வீடுகள் மற்றும் ஏனைய கட்டிடங்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய எரிசக்தி வலையமைப்புகள் சங்கம் தெரிவித்துள்ளது.
லண்டனின் வடக்குப் பகுதியில் உள்ள பின்ச்லி (Finchley) பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில், 20 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.40 மணியளவில் டொலிஸ் வீதியில் (Dollis Road) இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக லண்டன் பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரம் விழுந்ததில் காரைச் செலுத்திச் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் பொலிஸார், அவசர மருத்துவக் குழுவினர் மற்றும் லண்டன் விமான அம்புலன்ஸ் சேவையின் மருத்துவ நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த உயிரிழப்பு மிகவும் துயரமான சம்பவம் எனத் தெரிவித்த பொலிஸ் தலைமை ஆய்வாளர் கை எல்வுட், உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஸ்கொட்லாந்தின் டம்ஃப்ரீஸ் மற்றும் கலோவே (Dumfries and Galloway) பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் 60 வயது ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
காஸில் டக்ளஸ் (Castle Douglas) அருகிலுள்ள மிட் கெல்டன் (Mid Kelton) பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, புயலின் தாக்கம் காரணமாக பிரித்தானியா முழுவதும் மின்சார விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 07 மணி நிலவரப்படி 90,000க்கும் அதிகமான வீடுகள் மற்றும் ஏனைய கட்டிடங்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை என எரிசக்தி வலையமைப்புகள் சங்கம் தெரிவித்துள்ளது.
‘Boelo’ புயல் மற்றும் அதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை தாக்கிய ‘Austen’ புயல் ஆகியவற்றின் காரணமாக மொத்தமாக 838,700 கட்டிடங்கள் ஏதோவொரு கட்டத்தில் மின்தடையை எதிர்கொண்டதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
எனினும், தொடர்ந்தும் நிலவும் அபாயகரமான காலநிலை காரணமாக மின்சாரத் திருத்தப் பணிகளை உடனடியாக ஆரம்பிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப் பணிகளில் ஈடுபடும் பொறியியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியிருப்பதால், சில பகுதிகளில் மின்சார விநியோகத்தை மீள வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ENA தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை பிரித்தானியாவின் பல பகுதிகளில் மிக அதிக வேகத்தில் காற்று வீசியுள்ளது.
ஸ்கொட்லாந்தின் ஆர்கைல் மற்றும் பியூட் (Argyll and Bute) பிராந்தியத்திலுள்ள மக்ரிஹனிஷ் (Machrihanish) பகுதியில் மணித்தியாலத்திற்கு 85 மைல் வேகத்தில் காற்று வீசியதாகப் பதிவாகியுள்ளது.
அதேவேளை, அவுட்டர் ஹெப்ரிடீஸிலுள்ள ஸ்டோர்னோவே (Stornoway) மற்றும் வட வேல்ஸிலுள்ள கபெல் குரிக் (Capel Curig) பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 84 மைல் வேகத்தில் காற்று வீசியுள்ளது.
ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு பிரித்தானிய வானிலை அலுவலகத்தினால் செம்மஞ்சள் நிற பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று லிவர்பூல், மான்செஸ்டர், லீட்ஸ், ஷெஃபீல்ட் மற்றும் நியூகாசில் உள்ளிட்ட பகுதிகளுக்கும், மத்திய இங்கிலாந்து மற்றும் வட வேல்ஸின் சில பகுதிகளுக்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த எச்சரிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணி வரை அமுலில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இயன்றவரை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் வானிலை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெளியில் செல்ல வேண்டிய சந்தர்ப்பங்களில் மரங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு மிக அருகில் நடமாடுவதையும், அவற்றின் கீழ் தஞ்சமடைவதையும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடும் காற்றுடன் பெய்த கனமழையினால் பிரித்தானியாவின் பல பகுதிகளில் வெள்ள அபாயமும் அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளுக்கு நான்கு வெள்ள எச்சரிக்கைகளும், ஸ்கொட்லாந்தில் 17 வெள்ள எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டிருந்தன.
ஸ்கொட்லாந்தின் உயர்நிலப் பகுதிகளில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், குளுவானி இன் (Cluanie Inn) பகுதியில் 130 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது.
இதற்கிடையில் ஸ்கொட்லாந்தின் அபர்ஃபெல்டி (Aberfeldy) பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.50 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்கொட்லாந்தின் கிளைட் (Clyde) கடற்கரைப் பகுதிகளும் புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஸ்கெல்மோர்லி (Skelmorlie) மற்றும் லார்க்ஸ் (Largs) இடையிலான பிரதான வீதி சேதமடைந்துள்ளதுடன், லார்க்ஸ் பகுதியில் பல வர்த்தக நிலையங்கள் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ளன.
கௌரொக் (Gourock) பகுதியில் படகு ஒன்று வீதியோரத்திற்கு அடித்துச் செல்லப்பட்டதாகவும், கிர்வன் (Girvan) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மின்தடை நிலவியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டம்பார்டன் (Dumbarton) பகுதியில் மொபைல் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த கடையின் உரிமையாளரான முஹம்மது சுபைர் அஷ்ரப், வெள்ளத்தால் 5,000 முதல் 10,000 ஸ்டேர்லிங் பவுண்டுகள் வரையிலான இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிட்டுள்ளார்.
புயலின் தாக்கத்தால் நாட்டின் போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஸ்கொட்லாந்தில் தேவையற்ற வீதிப் பயணங்களைத் தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ள நிலையில், படகுச் சேவைகள், விமானப் போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகளிலும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
பெல்ஃபாஸ்ட், கிளாஸ்கோ, அபர்டீன் மற்றும் டப்ளின் விமான நிலையங்களுக்கான சில விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பிரித்தானியாவின் பல பகுதிகளில் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் காலநிலை ஓரளவு சீரடையக்கூடும் என்றாலும், எதிர்வரும் நாட்களில் மீண்டும் மோசமான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக ஸ்கொட்லாந்து அரசாங்கம் எச்சரித்துள்ளது.