சீனாவில் 12-வது மாடி ஜன்னலில் தொங்கிய 3 வயது சிறுமி: பிளாஸ்டிக் நாற்காலி கொடுத்து மீட்ட அண்டை வீட்டார்

பகிர்
WhatsApp Google News Facebook Post Telegram

சீனாவின் பூஜியான் மாகாணத்தில் உள்ள ஜாங்பிங் நகரில், அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடி ஜன்னல் கிரில் கம்பிகளுக்கு இடையே தலை மாட்டிக்கொண்டு காற்றில் தொங்கிய 3 வயது சிறுமி, அண்டை வீட்டாரின் சமயோசித செயலால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தந்தை இரவுப் பணிக்குச் சென்றிருந்த நிலையில், தாய் மளிகைப் பொருட்கள் வாங்க வெளியே சென்றிருந்த நேரத்தில் விழித்தெழுந்த சிறுமி ஜன்னல் வழியே வெளியே வர முயன்றபோது இந்தக் விபத்து நேரிட்டுள்ளது. சிறுமியின் தலை கம்பிகளுக்கு இடையே சிக்கியதால், அவரது உடல் முழுவதும் 12-வது மாடியிலிருந்து வெளியே அந்தரத்தில் தொங்கத் தொடங்கியது.

சீனாவில்
படம்: சீனாவில் 12-வது மாடி ஜன்னலில் தொங்கிய 3 வயது சிறுமி: பிளாஸ்டிக் நாற்காலி கொடுத்து மீட்ட அண்டை வீட்டார்

சிறுமியின் அழுகுரல் சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார், உடனடியாகச் செயல்பட்டு மீட்பு முயற்சியில் இறங்கினர். குறிப்பாக 11-வது மாடியில் வசித்த அண்டை வீட்டார், தங்கள் வீட்டு ஜன்னல் வழியே வெளியே குனிந்து ஒரு பிளாஸ்டிக் நாற்காலியைச் சிறுமியின் பாதங்களுக்குக் கீழ் முட்டுக் கொடுத்துத் தாங்கிப் பிடித்தனர். இதன் மூலம் சிறுமியின் முழு உடலின் எடையும் தாங்கப்பட்டு அவர் கீழே விழுவது தடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று ஜன்னல் கம்பிகளில் சிக்கியிருந்த சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். அண்டை வீட்டாரின் துரித முயற்சியால் சிறுமி எவ்விதக் காயமுமின்றி மீட்கப்பட்ட நிலையில், இந்த நெகிழ்ச்சியான மீட்புப் பணி குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

 

மூலம்: Colombo Tamil · திருத்தம் வேண்டுமா? எங்களுக்குத் தெரிவிக்கவும்