பூமியில் மனித நாகரிகம் இனி எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என்பதும், ஒரு மாபெரும் இயற்கைப் பேரிடரோ அல்லது தொழில்நுட்பக் கோளாறோ ஏற்பட்டால் மனிதர்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியுமா என்பதும் இன்று பலரையும் கவர்ந்த கேள்விகளாக உள்ளன. இந்தக் கேள்விகளுக்கு விடை காணும் நோக்கில், ஆயிரம் ஆண்டுகால மனித நாகரிகத்தின் எதிர்காலத்தை மையமாகக் கொண்டு ஒரு புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
மனித நாகரிகம் மிகப்பெரிய பேரழிவுகளைச் சந்தித்தபோதிலும், அவற்றிலிருந்து மீண்டு, தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்ந்து நீடிக்க முடியுமா என்ற கேள்விக்கு விடை காணும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கிய கணினி மாதிரிகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது, அதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த ஆய்வு, மனித நாகரிகம் எவ்வாறு அழிவைச் சந்திக்கலாம், அதிலிருந்து எவ்வாறு மீண்டெழலாம், தொடர்ந்து தொழில்நுட்ப வளர்ச்சியுடன் எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்த பல்வேறு அம்சங்களை ஆராய்ந்துள்ளது. பிரபஞ்சத்தின் அளவும் வயதும் மிகப்பெரியதாக இருக்கும் நிலையில், இதுவரை வேறு எந்தவொரு மேம்பட்ட நாகரிகத்தின் அடையாளங்களையும் மனிதர்கள் கண்டறியாதது ஏன் என்ற கேள்வி ஃபெர்மி முரண்பாடு எனப்படுகிறது.
இந்தக் கேள்வியை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. செலியா பிளாங்கோ தலைமையிலான ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த ஒரு நாகரிகத்தின் எதிர்காலம் தொடர்பாக பத்து வெவ்வேறு சூழல்களை உருவாக்கினர், ஒவ்வொன்றுக்கும் இருநூறு கணினி மாதிரிகள் நடத்தப்பட்டன.
ஒரு நாகரிகம் எவ்வளவு காலம் செயல்படுகிறது என்பதை அதன் ‘டூட்டி சைக்கிள்’ என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வாளர்கள் உருவாக்கிய மாதிரிகளில் இந்த விகிதம் சுமார் முப்பத்து எட்டு சதவீதம் முதல் நூறு சதவீதம் வரை மாறுபட்டது. ஒரு நாகரிகம் தனது வளங்களை முழுமையாகப் பயன்படுத்திவிடுவது அல்லது சுற்றுச்சூழல் பேரழிவைச் சந்திப்பது வரை இந்த ஆய்வுகள் தொடர்ந்தன.
பேரழிவுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் தொழில்நுட்பம், வளங்கள், மறுகட்டமைப்புக்குத் தேவைப்படும் காலம் ஆகியவற்றைப் பொறுத்து சில நாகரிகங்கள் மீண்டும் வளர்ச்சியடைய முடிந்தது.
ஒரு நாகரிகம் எவ்வளவு காலம் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தீர்மானிப்பதில் இரண்டு விஷயங்கள் முக்கியப் பங்கு வகித்தன. அந்த நாகரிகம் தனது வளங்களை எவ்வளவு வேகமாகப் பயன்படுத்துகிறது என்பது முதலாவது காரணம், பேரழிவுக்குப் பிறகு எவ்வளவு வளங்களை மீட்டெடுக்க முடிகிறது என்பது இரண்டாவது காரணம்.
இதன் அடிப்படையில் கிடைத்த முடிவுகள் ஆச்சரியமளிக்கும் வகையில் இருந்தன. கோல்டன் ஏஜ், அவுட் ஆஃப் ஈடன் எனப் பெயரிடப்பட்ட இரண்டு நாகரிகங்கள் ஆய்வுக் காலத்தில் ஒருமுறைகூட முற்றிலும் அழியவில்லை, அழிவிலிருந்து மீண்டு வந்துள்ளன. ஊரோபோரோஸ் என்ற நாகரிகம் மீண்டும் மீண்டும் சரிவையும் மறுமலர்ச்சியையும் சந்தித்தபோதிலும், சுமார் எண்பத்தேழு சதவீத காலம் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் செயல்பட்டது. இப்படி ஒவ்வொரு நாகரிகமும் ஒவ்வொரு விதமாக இருந்துள்ளது.
வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதும், முக்கியமான அறிவையும் தொழில்நுட்பத்தையும் பாதுகாப்பதும் நாகரிகம் நீண்ட காலம் நிலைத்திருக்க உதவும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். விவசாயம், மருத்துவம், எரிசக்தி, தகவல் தொடர்பு போன்ற துறைகளில் அடிப்படைத் தகவல்களைப் பாதுகாக்கும் முறையை உருவாக்குவது ஒரு முக்கிய யோசனையாக முன்வைக்கப்பட்டுள்ளது.
அதாவது, எதிர்காலத்தில் பேரழிவு ஏற்பட்டு அனைத்துமே அழிந்துபோகும்போது, அப்போது தப்பிப் பிழைத்திருப்போர் மீண்டும் இந்தத் தகவல்களை வைத்து சமூகத்தை உருவாக்கலாம்.