டி20 உலகக்கோப்பை தொடரின் மிக முக்கியமான சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் இன்று முதல் விறுவிறுப்பாகத் தொடங்குகின்றன. குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தங்களது முதல் பலப்பரீட்சையை கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடத்துகின்றன.
லீக் சுற்றில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணிக்கு, இந்த சூப்பர் 8 சுற்று ஒரு வாழ்வா சாவா போராட்டமாகவே பார்க்கப்படுகிறது. கேப்டன் சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு மிடில் ஓவர்களில் அழுத்தத்தைக் கையாள்வது பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் ஃபார்முக்கு திரும்புவது அணியின் வெற்றிக்கு மிக அவசியமான ஒன்றாக உள்ளது.
மறுபுறம், எவ்வித ஆரவாரமும் இன்றி அமைதியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணி, எந்தவொரு பலமான அணியையும் வீழ்த்தும் தகுதியைக் கொண்டுள்ளது. லீக் சுற்றில் முழுமையான ஆதிக்கம் செலுத்தாவிட்டாலும், அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்டுள்ள அந்த அணி பாகிஸ்தானுக்குப் கடும் சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, உடல்நலக்குறைவால் முந்தைய போட்டிகளில் விளையாடாத கேப்டன் மிட்செல் சான்ட்னர் இன்றைய போட்டியில் மீண்டும் களமிறங்குவது அந்த அணிக்கு பெரும் பலத்தை சேர்த்துள்ளது. ரச்சின் ரவீந்திரா மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டம் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியாக அமைய வாய்ப்புள்ளது.
இன்றைய போட்டி நடைபெறும் கொழும்பு மைதானம் கருப்பு மண் ஆடுகளத்தைக் கொண்டுள்ளதால், இது முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி தனது லீக் போட்டிகள் அனைத்தையும் இலங்கையிலேயே விளையாடியுள்ளதால், அவர்களுக்கு ஆடுகளத்தின் தன்மை நன்கு அத்துப்படியாக இருக்கும்.
வானிலை அறிக்கையின்படி, போட்டிக்கு முன்னதாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆடுகளத்தில் ஏற்படும் ஈரப்பதம் பந்தை வேகமாகச் சறுக்கச் செய்யும். இது ஸ்பின்னர்களுக்கு சவாலாக இருந்தாலும், வேகப்பந்து வீச்சாளர்களுக்குத் தொடக்கத்தில் சாதகமாக அமையலாம்.
புள்ளி விவரங்களின்படி பார்த்தால், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 49 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 24 முறையும், நியூசிலாந்து 23 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுமே கிட்டத்தட்ட சமபலத்துடன் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ஷதாப் கான் மற்றும் அப்ரார் அகமது ஆகியோர் மீதும், நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னர், பின் ஆலன் மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்கள் இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் தளங்களில் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
| பாகிஸ்தான் (Pakistan) | நியூசிலாந்து (New Zealand) |
| சாஹிப்சாதா ஃபர்ஹான் | டிம் சீஃபர்ட் (WK) |
| சைம் அயூப் | ஃபின் ஆலன் |
| சல்மான் அலி ஆகா (C) | ரச்சின் ரவீந்திரா |
| பாபர் அசாம் | கிளென் பிலிப்ஸ் |
| உஸ்மான் கான் | டேரில் மிட்செல் |
| ஷதாப் கான் | மார்க் சாப்மேன் |
| முகமது நவாஸ் | மிட்செல் சான்ட்னர் (C) |
| அப்ரார் அகமது | ஜேம்ஸ் நீஷம் |
| உஸ்மான் தாரிக் | கைல் ஜேமிசன் |
| சல்மான் மிர்சா | மேட் ஹென்றி |
| ஃபஹீம் அஷ்ரப் | ஜேக்கப் டஃபி |
மேலும் செய்திகள்





