அமெரிக்காவிற்கு கனடியர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் தொடர்ந்து குறைந்து வருவதாக, ஸ்டாடிஸ்டிக்ஸ் கனடா வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. வர்த்தக போர் மற்றும் அமெரிக்காவின் வரி (tariffs) நடவடிக்கைகள் காரணமாக கனடியர்களிடையே அமெரிக்கா குறித்த எதிர்மறை மனநிலை உருவாகியுள்ளதாக இந்தப் போக்கு பிரதிபலிக்கிறது.
ஸ்டாடிஸ்டிக்ஸ் கனடா திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, அக்டோபர் மாதத்தில் அமெரிக்காவிலிருந்து கனடிய குடியிருப்பாளர்கள் திரும்பிய பயணங்கள், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 26.3 சதவீதம் குறைந்துள்ளன. அந்த மாதத்தில் மொத்தம் 2.3 மில்லியன் கனடியர்கள் விமானம் மற்றும் காரின் மூலம் அமெரிக்காவிலிருந்து திரும்பினர்.
கார் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் 30.2 சதவீதம் சரிந்து 1.6 மில்லியனாகக் குறைந்தன. இதில் 67.5 சதவீதம் பயணங்கள் ஒரே நாளில் முடிந்தவையாக இருந்தன. விமானப் பயணங்களும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. அக்டோபரில் விமானம் மூலம் அமெரிக்காவிலிருந்து திரும்பிய கனடியர்கள் 6,85,100 பேர் மட்டுமே ஆக இருந்தனர். இது கடந்த ஆண்டை விட 15.1 சதவீதம் குறைவாகும்.
இந்தத் தரவுகள், இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட மற்றொரு ஸ்டாடிஸ்டிக்ஸ் கனடா அறிக்கையையும் உறுதிப்படுத்துகின்றன. அதில், அக்டோபரில் அமெரிக்காவுக்குச் செல்லும் கனடிய விமான நிலைய பயணிகள் எண்ணிக்கை 8.9 சதவீதம் குறைந்ததாகவும், இது தொடர்ந்து ஒன்பதாவது மாத சரிவாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
செப்டம்பர் மாதத்தில் Global News Ipsos நடத்திய கருத்துக் கணிப்பில் பங்கேற்ற கனடியர்களில் 10 பேரில் 6 பேர், இனி அமெரிக்கர்களை முன்புபோல் நம்ப முடியாது என தெரிவித்தனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கனடாவுக்கு விதித்த வரிகள் மற்றும் கனடா “51-வது மாநிலமாக வேண்டும்” என்ற அவரது கருத்துகள், கனடியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஸ்டாடிஸ்டிக்ஸ் கனடாவின் சமீபத்திய அறிக்கை, கனடியர்கள் வெளிநாட்டு பயணங்களையே குறைத்து வருவதை காட்டுகிறது. அக்டோபரில் கனடியர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய பயணங்கள் மொத்தம் 3.3 மில்லியன் ஆக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 18.4 சதவீதம் குறைவாகும். அதே நேரத்தில், அமெரிக்காவைத் தவிர்ந்த பிற நாடுகளுக்கு கனடியர்கள் மேற்கொண்ட பயணங்கள் 9.1 சதவீதம் உயர்ந்துள்ளன.
ஸ்டாடிஸ்டிக்ஸ் கனடா, “ஓவர்சீஸ்” பயணங்கள் என ஐரோப்பா, ஆசியா, ஓஷனியா, ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்காவைத் தவிர்ந்த பிற அமெரிக்க நாடுகளை வகைப்படுத்துகிறது. இந்த பகுதிகளுக்கான பயணங்களில் கனடியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Flight Centre Canada வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் படி, இந்தப் போக்கு அடுத்த ஆண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 70 சதவீதம் பேர் 2026ல் குறைந்தது ஒரு அல்லது இரண்டு பயணங்களைத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தாலும், அதில் அமெரிக்காவை பயண இடமாகக் கருதுவதாக கூறியவர்கள் வெறும் 8 சதவீதம் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்





