திருமணமான சில மணி நேரங்களில் தூக்கிலிடப்பட்ட இளைஞர்

பகிர்

ஈரானின் இஸ்பஹான் நகரில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதாக கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இருபத்தைந்து வயது இளைஞரான அலிதா ரெசா செபாஹி, தனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, சிறையில் இருந்த தனது வருங்கால மனைவியை தொலைபேசி வாயிலாக திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்து சில மணி நேரங்களிலேயே அவர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறப்படுவது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அலிதா ரெசா செபாஹி மற்றும் இருபத்திரண்டு வயதான மஹ்ஷாத் கேஷானி ஆகியோருக்கு இடையேயான திருமணச் சடங்கு, மனித உரிமைகள் வழக்கறிஞர் மற்றும் இருவரின் பெற்றோர்களின் உதவியுடன் தொலைபேசி வாயிலாக உறுதியேற்று நடத்தப்பட்டது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதாகக் கூறி கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியிருந்தது.

முன்னதாக ஜூலை மாதத்தில் பொதுமடியில் தூக்கிலிடப்பட இருந்த செபாஹி, அப்போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதால் தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் அவர் இஸ்பஹான் மத்திய சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். இந்த நிலையில், திருமணமான ஒரே நாளில் இருபத்தைந்து வயது இளைஞரான அலிதா ரெசா செபாஹி கொல்லப்பட்டிருப்பது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம், அரசியல் கைதிகள் மீதான மரண தண்டனையின் மனிதாபிமானமற்ற தன்மையையும், அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் விலையையும் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

மூலம்: Colombo Tamil · திருத்தம் வேண்டுமா? எங்களுக்குத் தெரிவிக்கவும்