உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் 2025: UAE 7ஆம் ஆண்டாக முதலிடம் – இலங்கை, இந்தியா எந்த இடத்தில்?

பகிர்
WhatsApp Google News Facebook Post Telegram

2025ஆம் ஆண்டிற்கான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையை Arton Capital நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தத் தரவரிசை, ஒரு நாட்டு குடிமகன் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது விசா ஆன் அரைவல் (Visa on Arrival) மூலம் பயணிக்க முடியும் என்பதன் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டும், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தொடர்ந்து 7ஆவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. UAE பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 179 புள்ளிகளுடன், 134 நாடுகளுக்கு விசா இல்லாமலும், 45 நாடுகளுக்கு விசா ஆன் அரைவல் மூலமும் பயணம் மேற்கொள்ள முடியும். மீதமுள்ள 19 நாடுகளுக்கு மட்டுமே முன்கூட்டிய விசா தேவைப்படுகிறது.

UAE-வின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட், உயர் தனிநபர் வருமானம், உலகத்தரம் வாய்ந்த வாழ்க்கைத் தரம் மற்றும் 10 ஆண்டுகள் வரையான கோல்டன் விசா போன்ற கொள்கைகளால் உலகம் முழுவதும் தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பணக்காரர்களிடையே மிகுந்த விருப்பமான பாஸ்போர்டாக உள்ளது.

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் 2025

அடுத்தபடியாக, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகியவை 175 புள்ளிகளுடன் இணைந்து இரண்டாவது இடத்தில் உள்ளன. குறிப்பாக, சிங்கப்பூர் கடந்த ஆண்டு 30வது இடத்திலிருந்து இந்த ஆண்டு 2வது இடம் வரை கணிசமாக முன்னேறியுள்ளது.

174 புள்ளிகளுடன் பிரான்ஸ், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், சுவீடன், நெதர்லாந்து, பின்லாந்து, லக்சம்பர்க், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுகல், கிரீஸ், ஆஸ்திரியா, மலேசியா, நோர்வே, அயர்லாந்து, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய 19 நாடுகள் இணைந்து மூன்றாவது இடத்தில் உள்ளன. இதில், மலேசியாவும் 41வது இடத்திலிருந்து 17வது இடம் வரை உயர்ந்துள்ளது.

மேலும், பிரித்தானியா மற்றும் கனடா 169 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், அமெரிக்கா 168 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் உள்ளன.

இதைப் போல, இந்தியா 74 புள்ளிகளுடன் 67வது இடத்தில் உள்ளது. இந்திய குடிமக்கள் 29 நாடுகளுக்கு விசா இல்லாமலும், 45 நாடுகளுக்கு விசா ஆன் அரைவல் மூலமும் பயணிக்க முடியும். ஆனால், 124 நாடுகளுக்கு முன்கூட்டிய விசா தேவைப்படுகிறது.

அதே நேரத்தில், இலங்கை 57 புள்ளிகளுடன் 84வது இடத்திலும், பாகிஸ்தான் 45 புள்ளிகளுடன் 91வது இடத்திலும் உள்ளன. இலங்கை குடிமக்கள் 21 நாடுகளுக்கு விசா இல்லாமலும், 36 நாடுகளுக்கு விசா ஆன் அரைவல் மூலமும் பயணிக்கலாம்; ஆனால் 141 நாடுகளுக்கு விசா தேவை.

மூலம்: Colombo Tamil · திருத்தம் வேண்டுமா? எங்களுக்குத் தெரிவிக்கவும்