மீன ராசியில் சனிபகவானின் நேரடி இயக்கம்; மூன்று ராசிக்காரர்களுக்குக் கடுமையான சவால்கள் மற்றும் இழப்புகள் ஏற்பட வாய்ப்பு
மீன ராசியில் சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைந்து நேரடி இயக்கத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில், மேஷம், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்குக் கடுமையான சவால்கள் மற்றும் நஷ்டங்கள் ஏற்படக்கூடும் என ஜோதிடக் கணிப்புகள் எச்சரிக்கின்றன.
செய்தி ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாகக் கருதப்படும் சனிபகவான், ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப நற்பலன்களையோ அல்லது தண்டனைகளையோ வழங்குபவராகக் கணிக்கப்படுகின்றார்.
இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி முதல் மீன ராசியில் சனிபகவான் தனது வக்ர நிலையிலிருந்து விடுபட்டு நேரடி இயக்கத்தைத் (Saturn Direct Transit) தொடங்கவுள்ளார். 2027 ஜூன் மாதம் வரை நீடிக்கவுள்ள இந்த நேரடி இயக்கத்தின் காரணமாக மேஷம், கடகம் மற்றும் விருச்சிகம் ஆகிய மூன்று ராசிக்காரர்களும் பல தடைகளையும் சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும் என ஜோதிடக் கணிப்புகள் எச்சரித்துள்ளன.
மேஷ ராசியினருக்கு இக்காலப்பகுதி மிகவும் சோதனையானதாக அமையவுள்ளது. சகல விடயங்களிலும் தாமதங்கள் ஏற்படுவதுடன், தமக்கு ஒதுக்கப்படும் பணிகளை நிறைவு செய்வதற்குப் பெரும் போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்படாவிட்டால் வீண் பழிகளைச் சுமக்க நேரிடலாம்.
நிதி இழப்புகள் ஏற்பட்டுச் சேமிப்புக்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது. அத்துடன், உறவுகளுக்குள்ளும் சவால்கள் ஏற்படக்கூடும் என்பதால், தனிப்பட்ட விடயங்களை மற்றவர்களுடன் பகிர்வதைத் தவிர்ப்பதுடன், வணிக ரீதியான கொடுக்கல் வாங்கல்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். எதிர்பார்த்த இலாபங்கள் நஷ்டங்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
கடக ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் இந்த நேரடி இயக்கம் சாதகமற்றதாகவே அமையவுள்ளது. இக்காலப்பகுதியில் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம். உத்தியோகஸ்தர்கள் தங்களது பணிகளை மிகவும் அவதானமாக மேற்கொள்ளாவிட்டால் அலுவலக ரீதியாகப் பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்.
திருமண வாழ்வில் சில மனக்கசப்புகள் மற்றும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், வியாபாரிகள் பாரிய நஷ்டங்களைத் தவிர்ப்பதற்காக மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். பொதுவாக, கடக ராசியினருக்கு இக்காலப்பகுதி பல தோல்விகளையும் நஷ்டங்களையும் கொண்டு வரக்கூடியதாக இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை அவசியம்.
விருச்சிக ராசியினருக்கு இந்த கிரகப் பெயர்ச்சி எதிர்மறையான பலன்களையே அதிகம் வழங்கவுள்ளது. தொழில் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் இருக்காது என்பதால், தற்போதைய வேலைகளை மாற்றும் முடிவுகளைத் தற்காலிகமாகக் கைவிடுவது சிறந்தது. புதிய வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்குச் சரியான காலம் கனிந்து வரும் வரை பொறுமை காப்பதே உகந்தது.
இக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் பெரும் நஷ்டங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. காதல் மற்றும் திருமண உறவுகளில் விரிசல்கள் ஏற்படாதிருக்கத் தங்களது நடத்தையில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவது நம்பிக்கையைக் கட்டியெழுப்ப உதவும். மேலும், வணிக ஒப்பந்தங்களில் தேவையற்ற ஆபத்துக்களைத் தவிர்ப்பதுடன், உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.