இந்தியப் பயிற்சியாளர் குழுவிற்கு சம்பளத்தை உயர்த்தக் கூடாது முன்னாள் இந்திய வீரர் கடும் விமர்சனம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உள்ளிட்ட இந்தியப் பயிற்சியாளர் குழுவிற்கு எதிராக முன்னாள் வீரர் தொட்டா கணேஷ் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமனில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவின் செயற்பாடுகள் குறித்து முன்னாள் இந்திய வீரர் தொட்டா கணேஷ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இன்னும் ஒரு மணி நேர ஆட்டம் எஞ்சியிருந்த நிலையிலேயே, இரு அணிகளின் தலைவர்களும் கைகுலுக்கிப் போட்டியைச் சமனில் முடித்துக்கொள்ள இணக்கம் தெரிவித்திருந்தனர். வீரர்களைப் போலவே பயிற்சியாளர்களுக்கும் அவர்கள் பயிற்சி அளிக்கும் போட்டி வடிவங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் எனவும், கௌதம் கம்பீர் உள்ளிட்ட பயிற்சியாளர்களுக்குச் சம்பள உயர்வு வழங்கப்படக் கூடாது எனவும் அவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

முதலாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்துள்ளமையால், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியின் வாய்ப்பு மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. நடப்பு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுற்றில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 5 வெற்றிகள், 4 தோல்விகள் மற்றும் 3 சமன்களுடன் 50.00 சதவீதப் புள்ளிகளைப் பெற்றுப் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் வழிகாட்டலின் கீழ் இந்திய அணி இதுவரை விளையாடிய 23 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றிகள், 10 தோல்விகள் மற்றும் 4 சமன்களைப் பதிவு செய்துள்ளதுடன், அணியின் வெற்றி வீதம் 39.13 சதவீதமாகக் காணப்படுகின்றது. கம்பீர் மற்றும் அவரது பயிற்சியாளர் குழுவின் கீழ் இந்திய அணி டெஸ்ட் அரங்கில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதுடன், சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராகத் தொடர் தோல்விகளைச் சந்தித்தமையும், அவுஸ்திரேலியாவில் 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பெறுபேறுகள் குறித்து மேலும் கருத்துத் தெரிவித்துள்ள தொட்டா கணேஷ், அதிக ஓட்டங்களைக் குவித்த பின்னரும் இந்தப் போட்டி சமனில் முடிந்தமை இந்தியாவிற்குப் பெரும் ஏமாற்றமளிக்கும் முடிவாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இந்தியா நிச்சயமாக இழந்துவிட்டதாகவும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.