விடுமுறை காலங்களில் குடும்பப் பிரச்சினைகளைத் தவிர்த்து தம்பதியர் மகிழ்ச்சியாக இருப்பதற்கான மூன்று முக்கிய ஆலோசனைகள்
விடுமுறை காலங்களில் குடும்ப ஒன்றுகூடல்கள் மற்றும் உறவினர்களின் எதிர்பார்ப்புகளால் ஏற்படும் மன அழுத்தத்தைத் தவிர்த்து, தம்பதியர் மகிழ்ச்சியாக இருப்பதற்கான மூன்று முக்கிய ஆலோசனைகளை உறவுமுறை நிபுணர் தன்யா மித்ரா பகிர்ந்துள்ளார்.
விடுமுறை நாட்கள் ஆண்டின் மிக மகிழ்ச்சியான தருணங்களாகக் கருதப்பட்டாலும், உறவினர்களின் வருகை, குடும்ப ஒன்றுகூடல்கள் மற்றும் அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அவை சிலவேளைகளில் தம்பதியருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்நிலையில், குடும்பப் பிரச்சினைகள் குறுக்கிடாமல் விடுமுறை கால மகிழ்ச்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகத் தம்பதியர் முன்கூட்டியே கலந்துரையாட வேண்டிய மூன்று முக்கிய விடயங்களை பார்க்கலாம்.
முதலாவதாக, விதிமுறைகள் தொடர்பில் தம்பதியர் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்.நத்தார் பண்டிகையை யார் முன்னின்று நடத்துவது மற்றும் ஒவ்வொரு குடும்பத்துடனும் எவ்வளவு நேரம் செலவிடுவது போன்ற விடயங்களைப் பதற்றமான சூழல் உருவாவதற்கு முன்னதாகவே தம்பதியர் பேசித் தீர்மானிக்க வேண்டும்.
இரண்டாவதாக, தம்பதியர் ஒரு குழுவாக இணைந்து செயற்பட வேண்டும். உறவினர்கள் தேவையற்ற கருத்துக்களைத் தெரிவிக்கும்போதோ அல்லது குடும்ப எதிர்பார்ப்புகள் அதிகமாகும்போதோ கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது அவசியமாகும். எல்லையொன்றை வகுத்துக்கொள்வதும், அசௌகரியமான சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பதை இணைந்து தீர்மானிப்பதும் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க உதவும்.
மூன்றாவதாக, எதிர்பார்ப்புகளைத் தெளிவுபடுத்துவதன் மூலம் ஏமாற்றங்களைத் தவிர்க்க முடியும். வெளிப்படுத்தப்படாத எதிர்பார்ப்புகளே விடுமுறை கால மன அழுத்தத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைகின்றன. பரிசுப் பொருட்களை வழங்குவது முதல் குடும்பப் பாரம்பரியங்களைப் பின்பற்றுவது வரை, குறிப்பாக வெவ்வேறு கலாசாரங்கள், நம்பிக்கைகள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட தம்பதியரிடையே சிறந்த விடுமுறை எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம்.
எனவே, தங்களுக்கு எது மிகவும் முக்கியமானது என்பது குறித்துத் தம்பதியர் வெளிப்படையாகப் பேசுவதுடன், தங்களுக்கெனப் புதிய பாரம்பரியங்களை உருவாக்கிக்கொள்ளவும் வேண்டும். புதிதாகத் திருமணமானவர்களாக இருந்தாலும் சரி, பல தசாப்தங்களாக இணைந்து வாழ்பவர்களாக இருந்தாலும் சரி, சிறிய அளவிலான புரிந்துணர்வுடனான உரையாடல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
அனைவரையும் திருப்திப்படுத்துவதை விட, விடுமுறை காலம் முழுவதும் தம்பதியர் இருவரும் ஒருவரையொருவர் மதித்து, ஆதரவாக இருந்து இனிய நினைவுகளை உருவாக்குவதே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்.