சீனாவைச் சேர்ந்த ஒரு பிரபல அழகு கலை இன்ஃப்ளூயன்சர் (Beauty Influencer), நேரடி ஒளிபரப்பின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் தனது உண்மையான முகம் வெளிப்பட்டதை அடுத்து, சுமார் 1,40,000 பின்தொடர்பவர்களை இழந்ததாகக் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களின் படி, அந்தப் பெண் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது அவர் பயன்படுத்திய ‘பியூட்டி ஃபில்டர்’ (Beauty Filter) திடீரென செயலிழந்தது. சில நொடிகள் மட்டுமே நீடித்த இந்த விபத்தின் போது, அந்தப் பெண்ணின் முதிர்ச்சியான தோற்றம் மற்றும் இயல்பான நிறம் திரையில் தெரிந்தது. மீண்டும் அந்த டிஜிட்டல் முகத்திரை (filter) செயல்படத் தொடங்கியதும், அவர் சிறிய முகமும், மிகச் சரியான அம்சங்களும் கொண்ட இளம்பெண்ணாக மாறினார்.
இந்தத் திடீர் மாற்றத்தால் அதிர்ச்சியடைந்த சுமார் 1,40,000 பேர் அவரைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பலர் அந்தப் பெண்ணிற்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். “ஃபில்டரை விட அவர் நேரில் இன்னும் அழகாக இருக்கிறார்” என்றும், “டிஜிட்டல் முகத்திரைகள் உயிரற்றவை” என்றும் ரசிகர்கள் சிலர் பதிவிட்டுள்ளனர்.
மேலும், இன்றைய டிஜிட்டல் உலகில் நிலவும் எட்ட முடியாத அழகுத் தரங்களுக்கு (unreachable beauty standards) எதிராகவும் நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. 2019 ஆம் ஆண்டில், “யுவர் ஹைனஸ் கியாவ் பிலுவோ” (Your Highness Qiao Biluo) என்ற சீன சமூக ஊடக நட்சத்திரமும் இதே போன்ற ஒரு தொழில்நுட்பக் கோளாறில் சிக்கினார். தன்னை ஒரு இளம் பெண்ணாகக் காட்டிக்கொண்ட அவர், நேரலையின் போது ஒரு நடுத்தர வயது பெண் என்பது தெரியவந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



